பிறிஸ்பேனில் உள்ள கோவாலா (koala) சரணாலயம்

19.2.07

கோவாலா என்ற மிருகம் அவுஸ்திரேலியாவில் மட்டுமே காணக் கூடிய ஒன்றாகும்.இது ஒரு பாலூட்டி மிருகமாகும். இது இந்த நாட்டின் ஒரு பிரபல்யமான அடையாளச் சின்னமாகும்.

கோவாலா என்பது பூர்வீகக் குடியினருடைய ஒருசொல் ஆகும். இதன் அர்த்தம் என்னவென்றால் "தண்ணீர் (தேவை) இல்லை" என்பதாகும். ஏனெனில், கோவாலாக்கள் தண்ணீ குடிப்பதில்லையாம்.இவற்றுக்குத் தேவையான நீரை யூக்கலிப்ரஸ் இலைகளிலிருந்தே பெறுகின்றனவாம். இவை அவுஸ்திரேலியாவின் கிழக்குக் கரையோரங்களில் மட்டுமே வசிக்கின்றன.

இதன் முரடான பாதங்களும் கால்களில் உள்ள கூரிய நகங்களும் மரங்களைப் பிடித்து ஏறுவதற்கு உதவுகின்றன. கோவாலா உடம்பில் சாம்பல் நிற வழுவழுப் பான உரோமங்களையும், அகன்ற காதுகளையும், பெரிய மூக்கையும் கொண்டிருக்கிறது.கோவாலாவைப் பற்றிய முழு விபரமும் அறிய இந்த வலைப் பக்கத்திற்குச் செல்லவும்.

உலகில் அழிந்துவரும் இனங்களில் இதுவும் என்றாகும். குடியிருப்புகளுக்காகவும், பயிர்ச்செய்கை,பண்ணைத்தொழில் போன்றவற்றுக்காகவும் கோஆலாவின் வசிக்கும் நிலங்கள் அழிக்கப் படுவதால் கோஆலாவின் தொகை குறைந்து வருகிறது.

கோவாலாவின் பிரதான உணவு யூக்கலிப்ரஸ்(eucalyptus) இலைகளாகும். இவை " கம் இலைகள்"(gum leaves) அழைக்கப்படுகிறது. இந்த மரங்களிலேயே அவை வசிக்கின்றன,மரத்தைவிட்டு இறங்கி நிலத்திற்கு வருவது எப்பவாவது அருமையாக தான் இருக்கும். கோஆலா இந்த இலைகளைத் தெரிவு செய்து தான் சாப்பிடுகிறது, எல்லா இலைகளையும் சாப்பிடுவதில்லை. அவுஸ்ரேலியாவிலுள்ள 600 வகையான யூக்கலிப்ரஸ் மரங்களில் 50 வகையான மரங்களின் இலைகளைத் தான் கோஆலாக்கள் சாப்பிடுகின்றன. இந்த இலைகளில் 50 சதவீதம் நீரும், 5 சதவீத மாச்சத்தும், சீனியும் உண்டாம். இந்த இலைகளால் கிடைக்கும் குறைந்த சக்தியை 19 மணித்தியாலம் நித்திரை கொள்வதன்மூலம் பயன்படுத்துகின்றன.இதனால் கோவாலாக்கள் போதையில் இருப்பவைபோலத் தோன்றும்.

உலகிலேயே முதலாவதும், பெரியதுமான கோஆலா சரணாலயம் பிறிஸ்பேனில் உள்ள "லோன் பைன் கோஆலா சரணாலயம்"(Lone Pine Koala Sanctuary ) ஆகும். இங்கு 130 வளர்ந்த கோவாலாக்களும், வருடாவருடம் வரும் குட்டிக் (joeys )கோஆலாக்களும் இருப்பதைக் காணலாம்.
தவிர, கோவாலாவைத் தூக்கி அணைக்கலாம், இலையை ஊட்டிவிடலாம். உலகெங்கும் இருந்துவரும் பெரும் புகழ்மிக்க மனிதர்கள் அவுஸ்திரேலியா வரும்போது இந்த சரணாலயத்திற்கு கிட்டத்தட்ட 75 வருடங்களாக வந்து சென்றிருக்கிறார்கள்.கடந்த வருடம் கடந்தகால ரஷ்ய பிரதம மந்திரி இந்தச் சரணாலயத்திற்கு வந்து சென்றார்.

அமெரிக்காவின் பி்ரபல பாடகி ஜனற் ஜக்சனும், காலஞ் சென்ற போப்பாண்டவரும் கோவாலாவைக் கட்டி அணைத்து வைத்திருப்பதை மேலுள்ள படங்களில் காணலாம்.

இந்தச் சரணாலயத்தில் ஓஸி(Aussie)யின் ஏனைய வனவிலங்குகளான கங்கரு,(kangkaroo) ஈமியூ,(Emu) (தீக் கோழி மாதிரி ஒரு பெரிய பறவை, எக்கின்னா(Echidna) (ஒரு வகை முள்ளுப் பன்றி), வொம்பற்(Wombat), பலவிதமான அவுஸ்ரேலியப் பறவைகள், பறக்கும் நரி,(Flying Fox) டிங்கோ(Dingo) எனும் காட்டு நாய் என்பவற்றுடன் மேலும் பல பிராணிகளைக் காணலாம்.
இந்தச் சரணாலயம் பிறிஸ்பேனின் சுற்றிலாப் பிரயாணிகளைக் கவரும் பிரதான இடமாகும். பிறிஸ்பேன் நகரத்திலிருந்து இவ்விடத்தை வந்து சேர 20 நிமிடம் எடுக்கும். கோல்ட் கோஸ்ற்( Gold Coast) ரிலிருந்து வர 50 நிமிடமாகும்.
நியூசவுத் வேல்ஸ் மாநிலத்தில் கோவாலாவைக் அணைத்துத் தூக்குவது 1997 லிருந்து தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் இது குயின்ஸ்லாந்து மாநிலத்தில், அதுவும் விசேடமாக இந்த "லோன் பைன் கோஆலா சரணாலயத்தில்" அனுமதிக்கப்பட்டுள்ளது.
கோவாலாவைப் பார்க்க ஆசையாக இருக்கா? இன்னுமென்ன யோசிக்கிறீர்கள்.கிளம்பி வாருங்கள் பிறிஸ்பேனுக்கு.

வலைப் பக்க உதவி:

http://www.koala.net

http://www.koala.net/lonepine/koalahug.htm

http://www.koala.net/download/lonewal1.jpg -wallpapaer

No response to “பிறிஸ்பேனில் உள்ள கோவாலா (koala) சரணாலயம்”