Showing posts with label உணவு. Show all posts
Showing posts with label உணவு. Show all posts

"அரிசி."..சீரியல் .. 1 {.cereal அல்லது serial...}..

உணவு இல்லாமல் உயிர்கள் இல்லை. உடுதுணி, உணவு, இருப்பிடம்(வீடு)என்னும் மனிதனின் அடிப்படைத் தேவைகளுள் முக்கியம் பெறுவது உணவு. தமிழர் உணவிலே முதன்மை வகிப்பது சோறு.நெல்லை அரிசியாக்கி அரிசியை சமைப்பதால் சோறு வருகிறது.

இந்த அரிசி உணவில் மட்டுமன்றி,கலாச்சாரம்,வர்த்தகம், அரசியல்,அத்துடன் நம் அங்கத்திலும் அங்கம் வகிக்கும் அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

யாழ்ப்பாணாத்தில் பல வகை அரிசி உண்டு.நெல்வயல்களில் பள்ளக் காணிகளில் விளையும் மொட்டைக் கறுப்பன் நெல்லில் இருந்து நல்ல சிவப்பான அரிசி கிடைகிறது. மேட்டுக்காணிகளில் விளையும் சிவப்பு, வெள்ளை அரிசிகளும் உண்டு.ஈழத்தின் மற்றப் பாகங்களில் சம்பா அரிசியும் கிடைக்கிறது.

தமிழகத்தில் உள்ள நன்செய்தானியங்களைப் பார்ப்போம். சீரகச் சம்பா, சின்னச் சம்பா,சிறுமணிச் சம்பா,பெரிய சம்பா, சன்னச் சம்பா,ஊசிச் சம்பா, இலுப்பைச் சம்பா,மல்லிகைச் சம்பா, கம்பன் சம்பா,கைவளச் சம்பா, குங்குமச் சம்பா, குண்டைச் சம்பா,கோடைச் சம்பா, ஈர்க்குச் சம்பாபுனுகுச் சம்பா, முத்துச் சம்பா, துய்ய மல்லிகைச் சம்பா,மோரன் சம்பா,மாலன் சம்பா, சீரன் சம்பா, செம்பிலிப் பிரியன், வெண்ணெல், செந்நெல் போன்றன உள்ளடங்குகின்றன என விநோதர மஞ்சரி குறிப்பிடுகிறது.இந்த அரிசி வகைதான் எத்தனை!

அரிசியினால் இட்டலி, தோசை, புட்டு, இடியப்பம், அப்பம் போன்ற பிரதான உணவுகளும், மற்றும் பலவித சிற்றுண்டிகளும் செய்யப்படுகின்றன.

இட்டலி அனைவர்க்கும் சிறந்த உணவு,எளிதில் சமிபாடு அடையக் கூடிய உணவாக
இருப்பினும் இதை யாழ்ப்பாணாத்தில் காலை உணவாக வீடுகளில் பெரும்பாலானோர் பொதுவாக சமைப்பது குறைவு என்றே சொல்லலாம். சைவச் சாப்பாட்டுக் கடைகளில் பொதுவாக இட்டலி விற்பதுண்டு. சைவங்கடை முதலாளி முதல் நாள் மிஞ்சுகிற சோற்றை ஊறவிட்ட உழுந்துடன் அரைத்துப் புளிக்கவைத்து, அடுத்த நாள் இட்டலியாக விற்பார் என நகைச்சுவையாகப் பேசப்படுவதுண்டு.இது உண்மையாகக் கூட இருக்கலாம்.



தோசை யாழ்ப்பாணத்தில் செந்நெல்லைக் குற்றி அரிசியைத் தீட்டி நீரில் ஊறவைத்து,அங்கு கறுத்தத் தோலுடனான உழுத்தம் பருப்புத்தான் கிடைக்கும். அந்த உழுத்தம் பருப்பை ஊறவிட்டு, பின் தோலை நீக்கி அரிசியையும் சேர்த்து அரைத்த மாவிலிருந்து தோசையை இரும்புக்கல்லில் சுடுவது இலகுவான சமையல் முறை. பின்னர் ஆங்கிலேயரின் வருகையைத் தொடர்ந்து கோதுமை மாவும் அறிமுகமாகிப் பின்னர் பங்கீட்டு அட்டைக்கு (கூப்பன்) பலருக்கும் கிடைக்கக் கூடியதாக வந்ததும் யாழ்ப்பாணத்தில் கோதுமை மாத் தோசை(கூப்பன் மாத் தோசை)யும் ஒரு காலை உணவாக முக்கிய இடம் பிடித்துக் கொண்டது. வடமராட்சியில் இந்தத் தோசை மிகவும் பிரபல்யம்.முன்பெல்லாம் வல்லிபுரக் கோவில் தேர்த்திருவிழாக் காலங்களில் சுடச் சுட வாங்கிச் சாப்பிடமுடிந்தது. நெல் வயல் வைத்திருப்போர் அரிசிமாத் தோசையையே சமைப்பர்.தோசை எப்படிச் செய்வது நாகமாணிக்கம்.கணேசன் என்பரின் கட்டுரையிலிருந்த கீழ்வரும் இரு பாடல்கள் மிகவும் இரசிக்கும்படியாக உள்ளன.
.
"சுலுடன் தலைசாய் செந்நெல் அரிசியும்
மாலின் வண்ணமாம் மையார் உழுந்தும்
பாலின் நிறம்போல் படிய அரைத்து
ஓர்நாள் நன்கு புளித்து
வார்க்கத் தோசை வனப்பொடும் வருமே"


இதன் கருத்து என்னவெனில்,செந்நெல்லிலிருந்து(சூலு ) தீட்டிய அரிசியையும், கரிய உறையை(திருமாலின் நிறமான = மாலின் வண்ணமாம்) நீக்கி உழுந்தையும் சேர்த்து அரைத்து, ஒரு நாள் முழுதும் புள்க்கவைத்துவிட்டு,தோசையை இரும்புக்கல்லில் சுட்டால் அது ஒட்டாமல் அழகாக வரும் என்பதாகும்.

"சூலின் நிரையினால் சுடர்முடி பணிந்து
மேலின் நிலையவர் வாழ்நெறி விளக்கும்
சாலிப் பயிர்க்கதிர் சார்ந்தவெண் அரிசியை
மாலின் வண்ணமாம் மையார் உழுந்துடன்
பாலின் நிறம்போல் படிய அரைத்து
ஓர்நாள் நன்கு புளித்து
வார்க்கத் தோசை வட்ட நிலாவே."


இனி இந்தப் பாட்டின் பொருளைப் பார்ப்போம். நன்கு கற்றவர் தலைக்கனமின்றி பணிவுடனிருப்பதைப் போல பணிவோடு மண்ணை நோக்கும் விதை(சூல்) நெற்களைக் கொண்ட நெற்(சாலி)கதிரிலிருந்து எடுத்த வெள்ளை அரிசியையும்,{முதற்பாட்டில் உள்ள நடு மூன்று பாடல் வரிகளும் இங்கே அதே கருத்துடன் வருகின்றன.அதாவது,} கரிய உறையை(திருமாலின் நிறமான = மாலின் வண்ணமாம்) நீக்கி உழுந்தையும் சேர்த்து அரைத்து, ஒரு நாள் முழுதும் புளி்க்கவைத்துவிட்டு,தோசையை இரும்புக்கல்லில் சுட்டால் பௌர்ணமி நிலவு போல வட்டமாக, அத்துடன் வெள்ளையாக (வெண் அரிசி காரணமாக)வரும் எனப்படுகிறது.
இன்னும் வரும்...........

இலக்கியத்தில் வரும் உணவுகள்.

தமிழிலுள்ள ஞான நூல்களில் தலையாயது "சிவஞானபோதம்" என்ற நூல் ஆகும் சிவஞானபோதத்தை இயற்றியவர் 13-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அருள்மிகு மெய்கண்ட தேவநாயனார் ஆவார். அந்த சிவஞானபோதத்திற்கு பேருரை விரித்தவர் திருவாவடுதுறை அதீனத்தைச் சார்ந்த மாதவச் சிவஞான யோகிகள். இவர் ஒருமுறை விருந்தினர் வந்தபோது அவர்களுக்கு உணவு கொடுக்க சமையலாளிடம் என்னென்ன எப்படிச் செய்ய வேண்டும் என கட்டளை இடுவதை கீழ்வரும் பாடலில் காணலாம்.

சற்றே துவையல்அரை தம்பிஒரு பச்சடிவை
வற்றல் ஏதேனும் வறுத்துவை - குற்றம்இலை
காயம்இட்டுக் கீரைகடை கம்மெனவே மிளகுக்
காய்அரைத்து வைப்பாய் கறி


ஒரு துவையல், அரையல்-பச்சடி(யாழ்ப்பாணத்தில் சம்பலைப் பச்சடி என்போம்),வறுவல்- வற்றல் குழம்பு என நினக்கிறேன்,கடையல்-கீரை (யாழ்ப்பாணத்திலும் முளைக்கீரையை அவித்துக் கடைவோம்), அரையல்-கம்மென்று மணம் வீசும் மிளகை அரைத்துவைக்கும் ரசம். இந்த அரையல் பொடியாக ( மாவாக )அரைப்பதை குறிக்கிறதாக் இருக்கலாம்.

இது தவிர, இன்னொரு வேளையில், சிவஞான முனிவர் வந்த விருந்தினரை வரவேற்று என்ன உணவளிக்கிறார் என்பதை நோக்குவோம்.

அரன்சிரம் காணாப்புள்ளும்
அத்துடன் இறக்கும்பூமி
வரன்முறை யாகவந்த
வடசொலில் சுவையாம்ஒன்றும்
கரம்தனில் அள்ளிஉண்ணக்
களிதரு பாயாடொடு
உரமலர் மந்தன்கூட்டும்
உண்ண வருகுவீரே


அரன் சிரம் காணாப் புள் என்பது அன்னப் பறவை. அன்னம் சோற்றைக் குறிக்கிறாது; , சாம்+ பார் சாகும் என்றால் இறக்கும், பார் என்றால் பூமி என்பதாக இறக்கும் பூமி என்பது சாம்பார் எனக் கருத்தாகிறாது. தமிழகத்தில் சாம்பார் பிரதான கறிகளில் ஒன்று. ஆனால் யாழ்ப்பாணத்தில் சாம்பார் என்ற சமையல் இருக்கவில்லை.வடமொழியில்(சொல்) சுவை எனறால் ரசம் என்று பொருள்.பாய்+அடு + ஒடு = பாயாடொடு. இதில் பாய் என்பது பாய்கின்ற, அடு என்பது அசம் (வடமொழியில்), என பாயாடு பாயாசம் என்றாகி வருகிறது. சனீஸ்வரனுக்கு இன்னொரு பெயர் மந்தன் என்பதாகும் மலர் என்பது "பூ" வைக் குறிக்கும்.எனவே "மலர்மந்தன்" என்பது "பூசனி" யைக் குறித்து நிற்கிறது.
அன்னம், சாம்பார், இரசம், பூசனிக் கூட்டு, பாயசம் போன்ற எல்லாமுடன் விருந்து கொடுக்கிறார் பாருங்கள்!