கனநாள் கழிந்தொரு கவிதை சுரந்தது!
கோப்பியொன் றடித்தேன்;
கொப்பியை விரித்தேன்
கூப்பிட்டாள் இவள்?
ஏனோ? என்றேன்.
கறிக்குப்
புளியம் பழம்போல றால்
வாங்கியிருக்கின்றேன்.
அதற்குள் வைத்துக் குழம்பு வைக்க
முருங்கைக் காய்தான் ருசியாய் இருக்கும்!
ஆதலால்,
அதோநம் வாசல் முருங்கையின்
உச்சிக் கந்தில்...
ஒன்று...இரண்டு....மூன்று,
நீண்டு முற்றிய காய்கள்
ஒருக்கால்...ஏறி
உசுப்பி விடுங்கள்; என்றாள்!
மறுக்கலாம்....
மீண்டும் இரவுகள் வராவேல்!
அதற்காய் இசைந்தேன்;
அவள் விருப்பின்படி
முருங்கையில் ஏறி, முறிந்து
விழுந்தேன்!
மீண்டும் இரவுகள் வராவேல்!"
முருங்கைக் காயின் பின்விளைவை முன்கூட்டியே கவிஞர் உணர்ந்துதான் இப்படிப் பாடுகிறாரோ?. படிப்போரை இப்படிச் சிந்திக்க வைக்கிற வரிகள் இவை.
பாவம் கவிஞர்! "மனிதன் ஒன்றை நினைக்கத் தெய்வம் வேறொன்றை நினைக்குமாம்" என்பதுபோல் ஆகிவிட்டது. கடைசியில் "முருங்கையில் ஏறி, முறிந்து
விழுந்து" அன்றிரவு படுிக்க வேண்டி வந்துவிட்டதே! அருமையான கவிதை! நான் ஈழத்தில் வாழும் காலத்தில் வாழ்ந்த இந்த கவிஞரை சந்திக்கவில்லையே என்று கவலையாயிருக்கிறது.
மேலும், கவிஞர் கையாண்ட " கோப்பி(காப்பி-தமிழகத்தில்), கொப்பி(பயிற்சிப் புத்தகம்), குழம்பு, உச்சிக் கந்தில், உசுப்பி விடல்" போன்ற சொற்கள் என்னை மீண்டும் ஈழத்திற்கு இழுத்துச் செல்கிறது
அடுத்து, முத்துப் போல் சோற்றுடன் முருங்கைக்காய்க் குழம்பு உண்டால் எப்படி இருக்கும் என்பதை முனைவர் தமிழப்பன் வர்ணிப்பதை "வல்லார்யார் சச்சியல் லால்" என்கின்ற கவிதையில் காணலாம்.
இஞ்சி முருங்கை இனியதோர் நெல்லிக்காய்
கொஞ்சம் உருளையதும் கூட்டிவர - பஞ்சனைய
சோறிட்டான் பாயசத்தால் சொக்கவைத்தான் சச்சியைப்போல்
வேறெவர்தாம் செய்வார் விருந்து.
முத்தைப்போல் சோறு முருங்கைக்காய் நற்குழம்பு
சத்தான இஞ்சிநெல்லி சார்ந்துவர - இத்தரையில்
வல்லாரை(ப்) போற்றி வளைத்துமே போடுவதில்
வல்லார்யார் சச்சியல் லால்.
விருந்தென்றால் நானும் விருப்புடனே சென்றேனா
விருந்தா மருந்தா வியந்தேன் - அருந்திடவே
இஞ்சிநெல்லி வல்லாரை இவைவைத்தால் என்சொல்ல
கொஞ்சு தமிழ்மொழியே கூறு.
மீண்டும் அழைப்பானோ மாட்டானோ என்றேநான்
தூண்டிற் புழுவாய்த் துடிக்கின்றேன் - தூண்டுசுவை
உண்டார் மறப்பாரோ ஒண்டொடியே என்வயிறு
அண்டாவாய் ஆகிவிட்ட தே.
கவிஞர் கண்ணதாசன் குறிப்பிடும் ஒரு நாடோடிப் பாடல்
மந்தையிலே மாடு மேய்க்கும்
மச்சானுக்கு மத்தியானம்
மொந்தையிலே சோற்றைப் போட்டு
முருங்கைக் கீரையை வதக்கிக் கொட்டி
என்று தொடங்குகிறது.
மேலும், காய்களைப் பற்றிய சிறுவருக்கான ஒரு பாடலில் முருங்கைக் காய் பச்சைக் கம்பு போல வருகிறது.
படத்தில் இருப்பது எங்கள் வீட்டு முருங்கைக் காய்
கம்பைப் போல முருங்கைக் காய்
கல்லைப்போல பறங்கிக் காய்
பாம்பைப்போலப் புடலங்காய்
பானைபோலப் பூசணிக் காய்
விரல்கள்போல வெண்லைக் காய்
விதையே இல்லா வாழைக் காய்
நன்றி: தமிழம்.நெற்.
இந்த சிறுவருக்கான பாடல் "மொட்டு வகுப்பு ஆசிரியர் கையேடு" என்ற தலைப்பின் கீழ் சிறுவர்க்கான தமிழ்ப் பாடற் தொகுப்பில் வருகிறது.
_________________________________________________________________________________________
சுவைத்துப் பார்த்துக் கருத்தைச் சொல்லுங்கள. நன்றி். அன்புடன் செல்லி.

