"நாளை நினையேன்" - கவிதை

இக் கவிதை கணேசன் ( பல்கலைக் கழக மாணவன்)எழுதி அனுப்பியிருந்தார். அப்படியே அதனை இப் பதிவில் தருகிறேன்.

கருத்தினில் அன்பாய்,
பொருந்தியே நின்றாய்.
இருமனம் பொருந்தச்
சம்மதம் கேட்டேன்.

நாளை வருகிறேனேன்றாய்
நாளையை நிலமெங்கும்
நாளை நாளையென
நாளைவரை கிறுக்கினேன்


நிலமெல்லாம் கேட்டது
நிலம் நிறைந்தநாளை
புலர்ந்து வெகுநேரமாயும்
தலமிங்கு வரவில்லையேன்?


நெருக்கமாய்க் கோடியிலே
இருக்கிறாய் எனவறிந்தேன்.
இருக்கிறாயோவென இனிமேலுனை
ஒருக்காலும் நினையேன்.

எழுதியவர்: கணேசன்

குயின்ஸ்லாந்தில்(Queensland) பவன்(BOWEN) மாம்பழமும் புட்டும்

குயின்ஸ்லாந்தில்(Queensland) பவன்(BOWEN) மாம்பழமும் புட்டும்
புட்டோடு தின்ன கறுத்தக் கொழுந்து மாம்பழம் இல்லையே என் ஏங்கிய எமக்கு பவன் மாம்பழம் ஒரு வரப்பிரசாதம்.மார்கழி நடுப்பகுதியிலிருந்து மாசி முற்பகுதிவரை பவன் மாம்பழம் மிகவும் மலிவாக கிடைக்கும். இது இங்கு கோடை விடுமுறைக் காலம் என்பதால், எங்கள் வீட்டில் தினமும் காலையில் புட்டும் மாம்பழமும்தான் நித்திய மேளம். படத்தைப் பாருங்கள் உங்களுக்கும் ஆசை வரும்.ஐரோப்பிய குடியேற்ற ஆரம்ப காலங்களில் வடகுயின்ஸ்லாந்திற்கும் தென்கிழகாசியாவிற்கும் ைடையிலான வியாபார கப்பல்களூடா மாம்பழங்கள் அறிமுகப் படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.(1) அவுஸ்திரேலியாவில் மிகவும் பிரபலமான மாம்பழம் கென்சிங்ரன்( Kensington Pride or Bowen Special, ) அல்லது பவன் எனப்படும் விசேடசமான மாம்பழந்தான்.இது கடும் மஞ்சள் நிறமுடைய அடிப்பாகத்தில் சிவப்பு நிறமுடைய பெரிய மாம்பழமாகும். இந்த மாம்பழம் தும்பற்ற, சதைப்பிடிப்புள்ள, வைற்றமின் "சீ" நிறைந்த மிக இனிப்பான மாம்பழம் ஆகும்.
படம்: நன்றி (4) .bowentourism.

வட குயின்ஸ்லாந்தில் பவன் (Bowen) எனும் இடத்தில் விளைவதால் இதற்க்கு இந்தச் சிறப்புப் பெயர். இந்த நகரத்திலிருந்து 4 மி.மீ தூரத்தில் (The BIG Mango) "ஒரு பெரிய மாம்பழம்" என்ற இடம் சுற்றுலாப் பிரயாணிகளைக் கவரும்வண்ணம் அமைந்திருக்கிறது. இந்த இனிய மாம்பழம் பவன் நகரத்தின் பெயருக்குப் புகழ் சேர்ப்பதால்அங்கு "ஒரு பெரிய மாம்பழம்" செயற்கையாகச் செய்யப்பட்டு இருக்கிறது. இதனைப் படத்தில் காணலாம்.

பவன் (BOWEN) மாம்பழம் என அழைக்கப்படும் கென்சிங்ரன் பிறைட்(Kensington Pride) இன மாம்பழந்தான் அவுஸ்திரேலியாவிலேயே மிகச் சிறந்த மாம்பழம் எனில் தவறாகாது. அண்மைக் காலதில் கிளென்,நாம் டொக் மாய், ஏளி பேட், புளோரிகன், ஆன், இர்வின், கென்ற் (Glenn, Nam Dok Mai, Early Gold, Florigan, Ann, Irwin,Kent)என்ற பல வகை மாம்பழங்கள் சந்தைக்கு வந்தபோதும், (3)அவற்றில் எந்த மாம்பழமும் பவன் மாம்பழத்தின் உருசிக்கு ஈடுகொடுக்க முடியவில்லை. அதனால் எப்பவுமே பவன் மாம்பழத்திற்கு படு கிராக்கி உண்டு.இப்பிடி எத்தனை மாம்பழங்கள் இருந்தாலும் எமக்குப் பிடித்ததும் (BOWEN)மாம்பழம்தான். சித்தினிப்பான சதைப் பிடிப்புள்ள மிகவும் பெரிய பழம். தின்ன தின்னத் தெவிட்டாதது.

இந்த பவன் மாமரம் நடுத்தரத்திலிருந்து பெரிய மரம் வரை காணப்படுகிறது.(3) இம் மரம் இந்தியாவில் தோன்றியதாக முதலில் கருதப்பட்டாலும், மிக நெடுங்காலமாக இம்மாம்பழ உற்பத்தி இடம்பெற்று வருவதால் உண்மையில் இது எங்கு தோன்றியது எனச் சொல்வது கடினமெனக் கருதப்படுகிறது.

திறமான மாம்பழக் கொட்டையிருந்து பவன் மாமரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்தக் கொட்டை பல மாங்கன்றுகள் முளைக்கக் கூடிய தன்மையைக் கொண்டதாம். அண்மைக் காலத்தில் நியூசவுத் வேல்ஸ் போன்றஏனைய இடங்களில் "ஒட்டு இன பவன்" மாமரச் செய்கை இடம் பெற்றுவருகிறது(2) என
பசும்பொன் தோட்ட கருத்துக்கள் (GREENGOLD GARDEN CONCEPTS) தெரிவிக்கின்றன

படம்:நன்றி GREENGOLD GARDEN CONCEPTS
யாழ்ப்பாணத்தில் எந்தளவுக்கு கறுத்தக் கொழுந்து மாம்பழம் பிரசித்தி பெற்றதோ அந்தளவுக்கு அவுஸ்ரேலியாவில் பவன் மாம்பழ்ம் பிரபல்யமானது. வருடம் முழுவதும் வெப்பமுள்ள வட குயின்ஸ்லாந்து மாநிலத்தின் காலநிலையே இந்த மாம்பழச் செய்கைக்கு ஏற்றதாயினும்,நியூசவுத் வேல்ஸின் கடற்கரையோரப் பகுதிகளிலும் இச் செய்கை இடம் பெறுகிறது. என்றாலும் குயின்ஸ்லாந்து பவன் மாம்பழத்திற்குத்தான் சரியான கிராக்கி உண்டு.
உசாத்துணை வலைப் பக்கங்கள்:
1. http://www.freshforkids.com.au/mango.htm
2. http://www.ricecrc.org/reader/tropicalfrt/mango-growing-5004.pdf
3. http://www.greengold.com.au/greengold/CARENOTES/CARENOTES/mango.htm
4. http://www.bowentourism.com.au/things_do_see/the_big_mango.html

அழகியின் ஆக்கத்தோடு அடியேன் ஆக்கமும் சேர்த்து ஆனது இக் கட்டுரை.
______________________________________________________________________________________________________
ஓரிரு சொற்களிலாவது உங்கள் கருத்தைச் சொன்னால்.....மிக நன்றி


கவிதைகளில் வரும் முருங்கைக் காய் - சுவைத்து பாருங்கள்!

முதலில் எஸ். பொ. நினைவுகளிலிருந்து ஈழத்து கவிஞர் நீலாவணனின் " முருங்கைக் காய்" என்கின்ற கவிதையை தருகிறேன்.

கனநாள் கழிந்தொரு கவிதை சுரந்தது!
கோப்பியொன் றடித்தேன்;
கொப்பியை விரித்தேன்
கூப்பிட்டாள் இவள்?
ஏனோ? என்றேன்.

கறிக்குப்
புளியம் பழம்போல றால்
வாங்கியிருக்கின்றேன்.
அதற்குள் வைத்துக் குழம்பு வைக்க
முருங்கைக் காய்தான் ருசியாய் இருக்கும்!
ஆதலால்,
அதோநம் வாசல் முருங்கையின்
உச்சிக் கந்தில்...
ஒன்று...இரண்டு....மூன்று,
நீண்டு முற்றிய காய்கள்
ஒருக்கால்...ஏறி
உசுப்பி விடுங்கள்; என்றாள்!

மறுக்கலாம்....
மீண்டும் இரவுகள் வராவேல்!
அதற்காய் இசைந்தேன்;
அவள் விருப்பின்படி
முருங்கையில் ஏறி, முறிந்து
விழுந்தேன்!

" மறுக்கலாம்....
மீண்டும் இரவுகள் வராவேல்!"
முருங்கைக் காயின் பின்விளைவை முன்கூட்டியே கவிஞர் உணர்ந்துதான் இப்படிப் பாடுகிறாரோ?. படிப்போரை இப்படிச் சிந்திக்க வைக்கிற வரிகள் இவை.
பாவம் கவிஞர்! "மனிதன் ஒன்றை நினைக்கத் தெய்வம் வேறொன்றை நினைக்குமாம்" என்பதுபோல் ஆகிவிட்டது. கடைசியில் "
முருங்கையில் ஏறி, முறிந்து
விழுந்து" அன்றிரவு படுிக்க வேண்டி வந்துவிட்டதே! அருமையான கவிதை! நான் ஈழத்தில் வாழும் காலத்தில் வாழ்ந்த இந்த கவிஞரை சந்திக்கவில்லையே என்று கவலையாயிருக்கிறது.
மேலும், கவிஞர் கையாண்ட " கோப்பி(காப்பி-தமிழகத்தில்), கொப்பி(பயிற்சிப் புத்தகம்), குழம்பு, உச்சிக் கந்தில், உசுப்பி விடல்" போன்ற சொற்கள் என்னை மீண்டும் ஈழத்திற்கு இழுத்துச் செல்கிறது

அடுத்து, முத்துப் போல் சோற்றுடன் முருங்கைக்காய்க் குழம்பு உண்டால் எப்படி இருக்கும் என்பதை முனைவர் தமிழப்பன் வர்ணிப்பதை "வல்லார்யார் சச்சியல் லால்" என்கின்ற கவிதையில் காணலாம்.


இஞ்சி முருங்கை இனியதோர் நெல்லிக்காய்
கொஞ்சம் உருளையதும் கூட்டிவர - பஞ்சனைய
சோறிட்டான் பாயசத்தால் சொக்கவைத்தான் சச்சியைப்போல்
வேறெவர்தாம் செய்வார் விருந்து.

முத்தைப்போல் சோறு முருங்கைக்காய் நற்குழம்பு
சத்தான இஞ்சிநெல்லி சார்ந்துவர - இத்தரையில்
வல்லாரை(ப்) போற்றி வளைத்துமே போடுவதில்
வல்லார்யார் சச்சியல் லால்.

விருந்தென்றால் நானும் விருப்புடனே சென்றேனா
விருந்தா மருந்தா வியந்தேன் - அருந்திடவே
இஞ்சிநெல்லி வல்லாரை இவைவைத்தால் என்சொல்ல
கொஞ்சு தமிழ்மொழியே கூறு.

மீண்டும் அழைப்பானோ மாட்டானோ என்றேநான்
தூண்டிற் புழுவாய்த் துடிக்கின்றேன் - தூண்டுசுவை
உண்டார் மறப்பாரோ ஒண்டொடியே என்வயிறு
அண்டாவாய் ஆகிவிட்ட தே.

கவிஞர் கண்ணதாசன் குறிப்பிடும் ஒரு நாடோடிப் பாடல்

மந்தையிலே மாடு மேய்க்கும்

மச்சானுக்கு மத்தியானம்

மொந்தையிலே சோற்றைப் போட்டு

முருங்கைக் கீரையை வதக்கிக் கொட்டி

என்று தொடங்குகிறது.

மேலும், காய்களைப் பற்றிய சிறுவருக்கான ஒரு பாடலில் முருங்கைக் காய் பச்சைக் கம்பு போல வருகிறது.

படத்தில் இருப்பது எங்கள் வீட்டு முருங்கைக் காய்

கம்பைப் போல முருங்கைக் காய்

கல்லைப்போல பறங்கிக் காய்

பாம்பைப்போலப் புடலங்காய்

பானைபோலப் பூசணிக் காய்

விரல்கள்போல வெண்லைக் காய்

விதையே இல்லா வாழைக் காய்

நன்றி: தமிழம்.நெற்.

இந்த சிறுவருக்கான பாடல் "மொட்டு வகுப்பு ஆசிரியர் கையேடு" என்ற தலைப்பின் கீழ் சிறுவர்க்கான தமிழ்ப் பாடற் தொகுப்பில் வருகிறது.

_________________________________________________________________________________________

சுவைத்துப் பார்த்துக் கருத்தைச் சொல்லுங்கள. நன்றி். அன்புடன் செல்லி.