"என்னிரத்தம்" கவிதை

பாட்டனைப் பார்க்கவே
பேரனும் பிற
நாட்டிலிருந்தே வந்தான்.
பார்க்கப் பரவசந் தரும்
பிஞ்சு முகம்.
கேட்கப் புளகாங்கிதம்
மழலைத் தமிழ்.

வீட்டில் வேலைசெய்ய
வந்து நிற்பான்
தானும் கூடவே.
தன்பாடும் தானுமாய்
இருந்த எனக்கு
தெரியுமாம் என்றான்
எல்லாந் தனக்கு.

வெட்டவேதும் என்றுபோனா
கத்தி கவனம், தாத்தா!
குனிந்தேதும் எடுக்கப்போனா
நாரி கவனம், தாத்தா!
சாப்பிடவென்று கையைவச்சா
கொட்டிண்டும் கவனம்,தாத்தா!
கைகழுவும் போதுகூட
சட்டை கவனம், தாத்தா!

அப்பனுக்குப் பாடஞ்சொன்னான்
அந்தச் சுவாமியப்பன்
அப்பனின் அப்பனெனக்கே
பாடஞ்சொல்லுஞ் சுப்பனாரிவன்?
என்னிரத்தம் அவனப்பனில்,
அவனிரத்தம் சுட்டிப்பயலிலெனில்,
என்கிறுக்கு இவனுக்கெனில்,
என்னிரத்தந்தானே இவனும்!.

விவசாயி - கவிதை

துயரற்ற விவசாயி்
தோட்டத்தில்,வயலில்
தொழில்தான் மூச்சு.

வெயில் தின்றமுகமும்,
கையில் வறண்டதோலும்,
தோற்றம் கவர்வதில்லை,
நோக்கம் அதுவுமில்லை.
நோய்க்குப் பயமுமில்லை,
நோய்க்குப் பயமவனிடமோ?

சுறுசுறுப்பிற் சூறாவளி
தலையின்பார மூட்டையால்
நெருநெருக்கும் கழுத்துள்ளே
முதுகில் மூட்டைச்சுமையில்
அடிக்கடி இளைக்கும்மூச்சிலே.
சோர்வில்லாத முழுமூச்சோடு
செய்துமுடிப்பதே பழக்கம்.

எடைகூடல், இடுப்புவலி
எலும்புருக்கி, புற்றுநோய்
நாரிப்பிடிப்பு, தோள்வலி,
மூட்டுவலி, முதுகுவலி
முழங்கால் கணுக்கால்வலி
தலையிடி தடிமன்காய்ச்சலென்று
தரையிலுங் கிடந்ததில்லை;
இருதயமும் இரும்புபோல
இதிலென்ன இரத்தழுத்தம்.

விவரமான விவசாயி
வேதனைகள் அவனுக்கில்லை
செய்தொழிலே அவன்மூச்சு!

எழுதியவர்: செல்லி

ஹைக்கூ

நிறைந்த பானையில்
கூரையினூடாய் வந்த
கனத்த மழை.

கதைத்ததைக் கணப்பொழுதில்
திரிச்சுச்சொன்ன
தொலைபேசி.

சேவைப் போர்வையில்
கூட்டாய்க் கூத்தடிக்கும
குழுவரசியல்.
(அன்பான தமிழ்மண நண்பர்களே,இது இங்கு யாரையும் தாக்குவதாக எழுதப்படவில்லை என்பதை அன்போடும் தாழ்மையோடும் அறியத் தருகிறேன்.இது நான் தற்போது வாழும் சமூகத்திற் கண்ட அனுபவம்.)

பாமரன் பசியில்
வாக்குச் சுரண்டக் கூரிய
ஆயுதம் அரிசி.

இது ஒரு புது முயற்சி ஆகையால் பிழை இருப்பின் அன்புடன் அறியத் தாருங்கள்.