"விவரமான விவசாயி"

துயரற்ற விவசாயிநான்
தோட்டத்திலும், வயலிலும்
தொழில்தான் என்மூச்சு.

வெயில் தின்றமுகமும்,
கையில் வறண்டதோலும்,
தோற்றம் கவர்வதில்லை,
நோக்கம் அதுவுமில்லை.
நோய்க்குப் பயமுமில்லை,
நோய்க்குப் பயமென்னிடமோ?

சுறுசுறுப்பில் நாஞ்சூறாவளி
தலையின்பார மூட்டையால்
நெருநெருக்கும் கழுத்துள்ளே
முதுகில் மூட்டைச்சுமையில்
அடிக்கடி இளைக்கும்மூச்சிலே.
சோர்வில்லாத முழுமூச்சோடு
செய்துமுடிப்பேன் செயல்பாத்து.

எடைகூடல், இடுப்புவலி
எலும்புருக்கி, புற்றுநோய்
நாரிப்பிடிப்பு, தோள்வலி,
மூட்டுவலி, முதுகுவலி
முழங்கால் கணுக்கால்வலி
தலையிடி தடிமன்காய்ச்சலென்று
தரையிலுங் கிடந்ததில்லை;
இருதயமும் இரும்புபோல
இதிலென்ன இரத்தழுத்தம்.

விவரமான விவசாயிநான்
வேதனைகள் எனக்கில்லை
செய்தொழிலே என்மூச்சு!

எழுதியவர்: செல்லி

"என்னிரத்தம்" கவிதை

பாட்டனைப் பார்க்கவே
பேரனும் பிற
நாட்டிலிருந்தே வந்தான்.
பார்க்கப் பரவசந் தரும்
பிஞ்சு முகம்.
கேட்கப் புளகாங்கிதம்
மழலைத் தமிழ்.

வீட்டில் வேலைசெய்ய
வந்து நிற்பான்
தானும் கூடவே.
தன்பாடும் தானுமாய்
இருந்த எனக்கு
தெரியுமாம் என்றான்
எல்லாந் தனக்கு.

வெட்டவேதும் என்றுபோனா
கத்தி கவனம், தாத்தா!
குனிந்தேதும் எடுக்கப்போனா
நாரி கவனம், தாத்தா!
சாப்பிடவென்று கையைவச்சா
கொட்டிண்டும் கவனம்,தாத்தா!
கைகழுவும் போதுகூட
சட்டை கவனம், தாத்தா!

அப்பனுக்குப் பாடஞ்சொன்னான்
அந்தச் சுவாமியப்பன்
அப்பனின் அப்பனெனக்கே
பாடஞ்சொல்லுஞ் சுப்பனாரிவன்?
என்னிரத்தம் அவனப்பனில்,
அவனிரத்தம் சுட்டிப்பயலிலெனில்,
என்கிறுக்கு இவனுக்கெனில்,
என்னிரத்தந்தானே இவனும்!.

வித்தியாசமான விலங்கு......

"கங்காரு, கொவாலாவும் காஞ்ச புல்லும்" என்ற பதிவுக்கு இந்தக் கட்டுரையை 3.4.2007 இல் எழுதி இருக்கிறேன்
அவுஸ்திரேலிய விலங்குகளில் பிளற்றிப்புஸ் (Platypus)ஒரு வித்தியாசமான விலங்கு ஆகும்.அவுஸ்ரேலியாவில் தஸ்மேனியா(Tasmania),விக்ரோறியா(Victoria),நியூ சவுத் வேல்ஸ்( New South Wales), குயின்ஸ்லாந்து ஆகிய மாநிலங்களில் பிளற்றிப்புஸ் காணப்படுகிறது. பிளற்றிப்புஸ் அவுஸ்திரேலியாவின் அடையாளச் சின்னமாகவும் விளங்குகிறது.இங்கே இருபது சதத்தில் இது இருப்பதை பாருங்கள்.
பிளற்றிப்புஸ் முட்டையும் இடும்:குட்டிகளுக்கு பாலும் ஊட்டுகிறது. இதனுடைய இன்னொரு வித்தியாசமான நடத்தை என்னவென்றால் இது நீரோடை, அல்லது சிற்றாறுகளில் நீந்தி இரை தேடும்போது கண்ணை மூடிக் கொள்ளுமாம்.

இதனுடய அலகு(சொண்டு-bill) வாத்தினுடைய அலகு போன்றது;ஆனால் பெரியது.இதனால் இது வாத்து-அலகு(duck-billed) பிளற்றிப்புஸ் என அழைக்கப்படுகிறது.
இது நீரிலும் நிலத்திலும் வாழக்கூடியது.ஆயினும் நீருக்குள் இரை தேடி நிலததுக்கடியில் ஒரு வளை(hole) தோண்டி அந்த வளைக்குள் வாழ்கிறது.இது மிக நீண்ட கிட்டத்தட்ட 50 அடி நீலமான வளையை நிலத்திற்கு அடியில் தோண்டக்கூடியதாம். இவ்வாறு பிளற்றிப்புஸ் கிண்டுவதற்கு நதிக் கரைகளில் உள்ள ஈரமண் இலகுவாக இருக்கிறது.

வீடியோவில் பார்க்க இங்கு சொடுக்கவும்.ஆகவே, இதன் தொழில் நீந்துதல், சாப்பிடுதல், வளை கிண்டுதல் என்பனவாம்.இந்த விலங்கு நீரில் கீழ் உலாவக் கூடிய உடலமைப்பைக் கொண்டது. இலகுவில் உலர்ந்துவிடக் கூடியதுமான தோல். உரோமங்களைக் கொண்ட, இதனுடைய நீண்ட வாலில் தேக்கி வக்கப்பட்டிருக்கும் கொழுப்பு குளிர் காலங்களில் பனிக் குளிர் நீரில் இது உறைந்துவிடாதபடி பாதுகாக்கிறது. இதனுடைய அலகு(bill) பறவைகளினது அலகு போல் அல்ல. இது மிருதுவான அதேநேரம்,அங்கிங்கு அசையக் கூடிய நெகிழ்வ்வுத் தன்மையுடயதாகும். இந்த அலகின் உட்புறத்தில் அதாவது கொடுப்புக்குள் பை (pouch) போல இருக்கின்றன.

நீருக்குள் கண்ணை மூடிக் கொண்டு இதனால் எப்படி உணவைத் தேடமுடிகிறது?
பிளற்றிப்புஸ்சின் அலகிலுள்ள மின்சார உந்து சக்தி இதற்கு உதவுகிறது. அதாவது,பிளற்றிபுஸ்சின் அருகில் இரை வரும்போது அலகின் ஒருவித மின்சார உந்துசக்தி அந்த இரையைப் பிடிக்கத் தூண்டுகிறது. யபி(yabby)
ஸ்றிம்ஸ்(shrimp), மற்றும் நீரில் வாழுகிற சிறு பிராணிகளையும் இது பிடித்துத் தின்னும்.இவற்றை நீருக்கு அடியியில் நீந்திப் பிடித்தவுடன் இது தின்பதில்லை. உடனே பிளற்றிபுஸ் வாயால் கவ்வி அதன் குடுப்புக்குள் உள்ள பை(pouch) க்குள் அடைந்து வைத்துக் கொண்டு தண்ணீருக்கு வெளியே வந்ததும் கொண்டுவந்த இரைகளை பைக்குள்ளிருந்து எடுத்து உண்கிறது.இதனால் இது ஒரு வித்தியாசமான விலங்கா உள்ளது.


ஆண் பிளற்றிப்புஸ்சின் பின் கால்களில் ஒரு மிகச் சிறிய விசமுள்ள கொம்புவடில் ஒரு நகம் இருக்கிறது.எதிரிகளிடமிருந்து தப்பித்துக் கொள்ள இந்த விச நகத்தால் குத்துகிறது.
இந்த விசம் ஒரு நாயைக் கொல்லக் கூடியளவு கடிமையானதாம். ஆனால் மனிதரை கொல்லாதே தவிர நோய்க்கு அவர்களை ஆளாக்கிவிடுமாம்.


பெண் பிளற்றிப்புஸ் இரண்டு வருடத்தின் பின் வழக்கமாக 2க்கு குறைந்த முட்டை இடுகிறது. அவை ஒரு அங்குலத்திலும் சற்றுக் குறைவான நீளமுடையவை. இதன் குட்டிகளுக்குப் பாலூட்ட முலைக் காம்புகட்கு பதிலாக இரு பைகள் (pouch) இருக்கின்றன. குட்டிக அவற்றுள் அலகை வைத்து பாலை உறிஞ்சிக் குடிக்கின்றன.ஏனைய விலங்குகளோடு ஒப்பிடும்போது இதுவும் வித்தியாசமாகத் தான் இருக்கிறதல்லவா!

மேலும் தகவல்களுக்கு விக்கிப் பீடியாவைப்நன்றி,படங்கள்: இமேஜ் கூகிள்

இலக்கியத்தில் வரும் உணவுகள்.

தமிழிலுள்ள ஞான நூல்களில் தலையாயது "சிவஞானபோதம்" என்ற நூல் ஆகும் சிவஞானபோதத்தை இயற்றியவர் 13-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அருள்மிகு மெய்கண்ட தேவநாயனார் ஆவார். அந்த சிவஞானபோதத்திற்கு பேருரை விரித்தவர் திருவாவடுதுறை அதீனத்தைச் சார்ந்த மாதவச் சிவஞான யோகிகள். இவர் ஒருமுறை விருந்தினர் வந்தபோது அவர்களுக்கு உணவு கொடுக்க சமையலாளிடம் என்னென்ன எப்படிச் செய்ய வேண்டும் என கட்டளை இடுவதை கீழ்வரும் பாடலில் காணலாம்.

சற்றே துவையல்அரை தம்பிஒரு பச்சடிவை
வற்றல் ஏதேனும் வறுத்துவை - குற்றம்இலை
காயம்இட்டுக் கீரைகடை கம்மெனவே மிளகுக்
காய்அரைத்து வைப்பாய் கறி


ஒரு துவையல், அரையல்-பச்சடி(யாழ்ப்பாணத்தில் சம்பலைப் பச்சடி என்போம்),வறுவல்- வற்றல் குழம்பு என நினக்கிறேன்,கடையல்-கீரை (யாழ்ப்பாணத்திலும் முளைக்கீரையை அவித்துக் கடைவோம்), அரையல்-கம்மென்று மணம் வீசும் மிளகை அரைத்துவைக்கும் ரசம். இந்த அரையல் பொடியாக ( மாவாக )அரைப்பதை குறிக்கிறதாக் இருக்கலாம்.

இது தவிர, இன்னொரு வேளையில், சிவஞான முனிவர் வந்த விருந்தினரை வரவேற்று என்ன உணவளிக்கிறார் என்பதை நோக்குவோம்.

அரன்சிரம் காணாப்புள்ளும்
அத்துடன் இறக்கும்பூமி
வரன்முறை யாகவந்த
வடசொலில் சுவையாம்ஒன்றும்
கரம்தனில் அள்ளிஉண்ணக்
களிதரு பாயாடொடு
உரமலர் மந்தன்கூட்டும்
உண்ண வருகுவீரே


அரன் சிரம் காணாப் புள் என்பது அன்னப் பறவை. அன்னம் சோற்றைக் குறிக்கிறாது; , சாம்+ பார் சாகும் என்றால் இறக்கும், பார் என்றால் பூமி என்பதாக இறக்கும் பூமி என்பது சாம்பார் எனக் கருத்தாகிறாது. தமிழகத்தில் சாம்பார் பிரதான கறிகளில் ஒன்று. ஆனால் யாழ்ப்பாணத்தில் சாம்பார் என்ற சமையல் இருக்கவில்லை.வடமொழியில்(சொல்) சுவை எனறால் ரசம் என்று பொருள்.பாய்+அடு + ஒடு = பாயாடொடு. இதில் பாய் என்பது பாய்கின்ற, அடு என்பது அசம் (வடமொழியில்), என பாயாடு பாயாசம் என்றாகி வருகிறது. சனீஸ்வரனுக்கு இன்னொரு பெயர் மந்தன் என்பதாகும் மலர் என்பது "பூ" வைக் குறிக்கும்.எனவே "மலர்மந்தன்" என்பது "பூசனி" யைக் குறித்து நிற்கிறது.
அன்னம், சாம்பார், இரசம், பூசனிக் கூட்டு, பாயசம் போன்ற எல்லாமுடன் விருந்து கொடுக்கிறார் பாருங்கள்!

Weird-வியேட்.?....ம்ம்..சரி . ஏதாவது எழுதுகிறேனே

வியேட் ஆக எதையென்றாலும் எழுத துளசியின் அழைப்பு வந்ததும்,மறுக்க முடியுமா?. ஆனா weird ஆக எதை எழுதுவது என்பதே வியேடாகத் தான் இருந்தது. உஷா அவங்களும் மனச்சாட்சியை எழுதச் சொல்லி அழைப்பு விடுத்தார்.உஷா, இது தானுங்க என் மனச் சாட்சி!, வியேடா இருக்குது, பார்த்தீங்களா!.
என்னைப் பற்றி என்ன வியேட் ஆக இருக்கு என்று யோசிச்சு பார்த்தேன். என்னோட குட்டிக்குட்டி மறதிகளைப் பற்றி எழுதப் போகிறேன்.வீட்டைப் பூட்டிட்டு போய், இரண்டு மூண்டு கீ.மீ போயிட்டுத் திரும்பி வந்து கதவை ஆட்டிப் பார்ப்பேன்; அடுப்பை நிப்பாட்டி விட்டுப் போய் (நிப்பாட்டின்னான் என்பது சரியாக நினைவிருந்தாலும்) பயங்கரக் கற்பனை எல்லாம் மூளைகுள்ள ஓடும், உடன திரும்பி வந்து அடுப்பைப் பாப்பேன்.அது ஏற்கனவே நிப்பாட்டுப்பட்டுத் தான் இருக்கும்.

பையன்களை 4 pm மணிக்கு ஏத்திக் கொண்டுவர ரயில்வே ஸ்ரேசனுக்கு போறதுக்கு முதல் மூண்டரை மணிக்கு ஒரு குட்டித் தூக்கம் போட்டு, ஃப்போன் அடிக்க எழும்பி நேரத்தைப் பார்த்தா நாலரை மணியாயிருந்தது. ஸ்ரேசனில பையன்கள் அழுதபடி இருந்தாங்கள்.அதற்குப் பின் பகல்த் தூக்கமே வர்றதில்லை.இது நடந்து 3 வருஷத்துக்கு மேலாகிறது.

ஒரு முறை காரை பாக் பண்ணிட்டு திரும்ப வந்து காருக்கு சற்றுக் கிட்டவாக நின்று கொண்டே காரை எங்கை பாக் பண்ணினேன் என்று தேடி இருக்கிறன்.சின்ன வயசில பள்ளிக்கூடத்தில லஞ் box, புத்தகங்களை மறந்து விட்டிட்டு வந்த கதையிலிருந்து இன்னும் தொடர்கிறது.இருந்தாலும் இவற்றை நினைத்துப் பார்த்தா வியேடாத் தான் இருக்கு.


சாத்திரம்(சோதிடம்) கொஞ்சம் பார்க்க தெரியும் என்றதால ஒரு தடவை ஒருத்தர் தனக்கு அதிஷ்ட லாபச் சீட்டில காசு வருமோ என்று பார்த்துச் சொல்லச் சொன்னார்.நானும் சும்மா ஹொபியாக அந்தக் குறிப்பைப் பார்த்து விட்டு குறிப்பிட்ட காலத்தின் பின் அப்படி நடக்கலாம் என்று சொல்லி,காலத்தையும எழுதிக் குடுத்தேன்.என்ன எழுதிக் கொடுத்தேன் என்றே ஞாபகமில்லை.ஐந்து வருடங்கழித்து அந்த நபருக்கு எத்தனையோ மில்லியன் கிடைத்ததாம் எனக் கேள்விப்பட்டேன். நான் சொன்னது பலித்து விட்டது என நினைக்கும்போது வியேடாகத் தான் இருந்தது.
அதன் பின் ஒரு அம்மா எனக்கு அம்மன் வாலாயம் இருக்கிறதோ? எனக் கேட்டார்.ஏனென்றால் நான் சொல்வது பலிக்கிறதாம். அதற்குப் பிறகு சாத்திரம் யாருக்கும் சொல்வதில்லை.ஏனென்றால் என்னை அம்மனாக்கி அபிஷேகம் செய்துவிடுவார்களோ என்ற பயந்தான்.இவற்றை நினைக்கும்போது வியேடா இருக்குதுங்கோ!


எதிகாலத்திற்கு திட்டம் போடுறது, ஓய்வு காலத்திற்கு சேமிக்கிறது அதுக்காக இன்வெஸ்மன்ற்க்கு வீடு வாங்கிறதெல்லாம் செய்யிறதில்லையுங்கோ.ஏனென்றால் சிறுவயசிலிருந்தே போர்க் காலச் சிக்கலில தப்பிப் பிழைத்ததால் மரணம் என்பது தூசாகிவிட்டது. எப்பவுமே அதற்குத் தயார். ஆனா அப்பிடியானவங்களுக்கு மரணம் கெதியா வராதாமே! என்று எங்க அம்மா சொல்லுவா.இது உங்களுக்கு வியேடாத் தெரியலையா?

இப்போதைக்கு இது போதும் என நினைக்கிறேன். இனி அடுத்து வியேடா யாரு வரப் போறாங்க பார்ப்போமே!
இந்த விளையாட்டுக்கு நான் அழைக்கிறேன்

யோகன் - அவனுக்கு வியரடி!!( Weird )
வெற்றி
சந்திரவதனா - WEIRD - 14வது மாடிக்கு நடந்தே போகிறேன்
சின்னக்குட்டி -...விசித்திரமாண குணாம்சமா. உளபிறள்வா.
வசந்தன்

"வியேட்" பற்றி எழுத என்னை அழைத்தவர்களின் அனுபவப் பதிவுகள்:
கிறுக்ஸ் & கிறுக்ஸ்(weird)
'வியர்ட்' மனதின் இரட்டைநிலை...
நான் ரிஸ்க் எடுப்பேன் !
நானொரு 'வியர்டூ'ங்க
"நான் ஒரு வியர்டு தானே! தெரியாது?"
"தொட்டிற் பழக்கம் - ஒரு weird பதிவு"

மனித உழைப்பு ஒரு வேளை சோற்றுக்காகவா?.......அதுவும் பிரச்சனை தருகிறதா?

மனிதன் தொழில் எதற்காகச் செய்கிறான்? மாடிவீடு,கார், நல்ல உடைகள் என ஆடம்பரமாக வாழ்வதற்கா? அல்லது அன்றாட தேவைகளைப் பூர்த்தி செய்யவா? இந்தக் காரணங்கள் எப்படி இருந்தாலும், அடிப்படையில் மனிதன் உழைப்பது உணவுக்காகத் தான் என்பதை மறுக்க முடியாது.பெரும் வருமானந் தரும் தொழிலானாலும் சரி, சிறு வருமானந்தரக் கூடியதொழிலானாலும் சரி மனிதன் உழைப்பது சாப்பாட்டுக்காகத் தான்.பசி என்பது எல்லா மனிதருக்கும் உண்டு.ஏனெனில் மனிதன் தன் மானத்தோடு வாழ விரும்புபவன். தனக்குத் தேவையான உணவை தானாகத் தேட வேண்டும்.
புராதன காலத்திற் கூட மனிதன் வேட்டையாடி அதாவது அந்த வேட்டைத் தொழிலைச் செய்து உணவைப் பெற்றுக் கொண்டான். மனிதனின் அறிவு விருத்தியடைந்து அவன் கல்வியைக் கற்கத் தொடங்கினான். தனிய அறிவுக்காக மட்டுமல்ல, தொழிலுக்காகவும்தான் கல்வியைக் கற்கிறான். அவனவன் கல்வித்தகமைகளுக்கேற்ப தொழிலைச் செய்கிறான்.பெரிய அரசன் ஆனாலும் சரி, தொழிலதிபரானாலும் சரி, அன்றாடம் உழைக்கும் கூலிக்காரன் ஆனாலும் சரி அவர்கள் உழைப்பின் அடிப்படை ஒரு வேளை உணவுக்குத்தான். இதனைத்தான் கீழ்வரும் பாடலில் குறிப்பிடுகிறது.

சேவித்தும் சென்று இரந்தும் தெண் நீர்க்கடல் கடந்தும்
பாவித்தும் பாராண்டும் பாட்டு இசைத்தும் போவிப்பம்
பாழின் உடம்பை வயிற்றின் கொடுமையால்
நாழி அரிசிக்கே நாம். (19, நல்வழி)

வயிற்றுப் பசியின் கொடுமையினாலே மற்றவரை வணங்கியும்; சென்று இரங்கிக் கேட்டும்;கடல் கடந்து வெளிநாட்டுக்குச் சென்றும்;(திரை கடலோடியும் திரவியந் தேடு) ஒன்றுக்கும் தகுதியற்ற அற்பர்களை (தொழில் தேவைக்காக) பெரியவர்களாக (நீ தானையா பெரிய மனுசன் என முகஸ்துதி பேசி) பாவித்தும்;உலகை ஆண்டும் (முன்பு அரசன் ஆண்டான் தற்போது அதிகாரங்களை வைத்து பல பேர் பல இடங்களில் ஆளுகிறார்கள்) செல்வர்களைப் புகழ்ந்து பாட்டுப் பாடியும் நாம் இந்த உடம்பை ஒரு படி அரிசிக்காகவே உழைத்துக் கொண்டிருக்கிறோம்.

இப்படி அடிப்படையில் உணவுக்காக உழைக்கும்போது, அந்த உணவே அவனது உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கிறது என்றால் அது யாருடைய தவறு?.இதற்கு மனிதனுடைய உடற் சோம்பல், மனச் சோம்பல்தான் காரணம். இன்றைய மனிதன் அந்த உணவை வயதிற்கேற்ப சரியான அளவில், உரிய நேரத்தில், ஊட்டச் சத்து உள்ளதாக உண்ணத் தவறியதால் தற்போது உலகெங்கும் உடல் "எடை அதிகரிப்பு"(over weight) பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.
உடலில் அதிகரித்துள்ள கொழுப்பு (obesity)வயதானவர், இளையஞர், சிறுவர் என்ற வயது வேறுபாடின்றி பிரச்சனையாக இருந்து வருகிறது.உடலில் கொழுப்பின் அளவு கூடும்போது உடலின் எடை (நிறை) அதிகரிப்பு ஏற்படுகிறது. இந்த எடை அதிகரிப்பு பல நோய்களுக்கு இடமளிக்கிறது.இருதய சம்பந்தமான நோய்கள், கொலஸ்திரோல் பிரச்சனை, நீரிழிவு, புற்றுநோய் என்பவற்றை உதாரணமாகக் குறிப்பிடலாம்.அத்துடன், ஓடி, ஆடி வேலை செய்யும் ஆற்றலைக் குறைக்கிறது; இதனால் தொழில் வாய்ப்பை இழக்க நேரிடுகிறது; சமூகத்தில் மதிப்பை குறைக்கிறது; மன அழுத்ததைக் கொடுக்கிறது.

இந்த எடை அதிகரிப்புப் பிரச்சனைக்கு சூழல், பழக்க வழக்கங்கள், பரம்பரை, பிறப்பு சம்பந்தமான காரணங்கள் தொடர்பு பட்டிருந்தாலுங்கூட, உணவு முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை யாரும் மறுப்பதற்கில்லை.
_____________________________________________________________________________________

எந்தப் பாம்பு என்றாலும் பாம்புதானே! ...ஒரு பாட்டும் கேட்கலாம்

பாம்பைக் கண்டா சாதரணமாக படையே நடுங்கும். அவுஸ்திரேலியாவிலே மண்ணிற பாம்பென்றால் (Brown Snake) எல்லாருமே மிகவும் பயப்பிடுவார்கள்.ஏனென்றால் இது உலகிலுள்ள மிகவும் விசமுள்ள தரைப் பாம்புகளிலேயே இது இரண்டாவதாம்.
இரண்டு மீற்றர் நீளமுள்ள இந்தப் பாம்பு தரையில் துரிதமாக ஊரும். இந்தப் பாம்பு ஒருமுறை கடித்துவிட்டு ஓடிவிடாது. இதற்கு விரைவில் கோபம் வந்திடுமாம்.யாராவது தன்னைத் தாக்க வருகிறார்கள் எனும்போதுதான் அது கோபத்தில் திரும்பத் திரும்ம்பக் கொத்துகிறதாம்.இவை மக்கள் வாழும் இடங்களை அண்டி வாழுகின்றன. காரணம் என்னவெனில் அங்கு தான் இவைக்கு தேவையான உணவு அதாவது எலி, தவளை, முயல் போன்றன கிடைக்கிறது. இதனால் அவுஸ்திரேலியாவின் சிறு நகர்ப்புறங்களில் இவற்றின் நடமாட்டம் அதிகமாக இருக்கிறது.(1)இவை ஆவுஸ்திரேலியாவிலேயே குயின்ஸ்லாந்தில்த் தான் அதிகமாக் காணப்படுகின்றன. எங்கள் பக்கத்து சிறு நகரமான வெஸ்ற்லேக்கில்(Westlake) மண்ணிறப் பாம்பொன்று கடந்த வாரம் ஒரு நாயைக் கடித்திருக்கிறது. அதுவும் வீட்டிற்குள்ளே வந்து தாக்கி இருக்கிறது. எந்தப் பொந்துக்குள்ளும் இலகுவில் இந்த வகைப் பாம்புகள் நுழையக் கூடியவை என்பதால் இவை வீடுகளுக்குள் (யன்னல் ஊடாக) செல்வதில் ஆச்சரிய்ப்பட ஒன்ற்மில்லை.

நாயைக் கொத்துவதைக் கண்ட அந்த வீட்டுப் பெண் துவாய் ஒன்றை பாம்பிற்கு எறிந்து அது மூடுப்பட்டவுடன் அந்த நாயை அந்த இடத்தை விட்டு அகற்றி இருக்கிறார். பின்னர் பாம்பு பிடிப்பவரின் உதவியை நாடினார். தனது நாய்க்கு இந்த ஆபத்து ஏற்பட்டதால் அயலவருகு இச் சப்பவம் ஒரு எச்சரிக்கையாக இருக்கட்டும் என அந்தப் பெண் வேன்டிக் கொண்டார்.(2)

இதே போல் மாசி மாதம் 2007 இல் மிடில் பாக்(Middle Park) எனும் இடத்தில் கெயித் ற்றவேஸ் (Keith Travers) என்பவரை ஒரு மண்ணிறப்பாம்பு கடித்து அந்த நபர் இரண்டு நாள் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றாராம் என பாம்பு பிக்க உதவுபவர் குறிப்பிட்டார். பதினாறு வயதுப் பையன் ஒருவனும் 13/1/2007 இல் சிட்னியில் இந்தப் பாம்புக் கடியால் மரணமடைந்திருக்கிறான்.(1) 1998 இல் இந்த பாம்பு கொத்தி 6 பேர் இறந்திருக்கிறார்களாம். வருடத்திற்கு சராசரியாகப் பார்த்தால் 2 பேர் இறக்கிறார்களாம்.(3)

இந்த பாம்புகள் பற்றிய தகவல்கள், கதைக்ளை அறியும்போது யாழ்ப்பாணத்தில் எங்கள் ஊரில் அடிக்கடி எங்கும் காணக் கூடிய சாரைப் பாம்பின் நினைவுதான் வருகிறது. சாரை ஊரும்போது சர சர என எழுப்பும் என்ற ஒலிக் குறிப்பின் அடப்படையில் சாரை என்று பெயர் வந்திருக்கலாம் என நான் நினைக்கிறேன். ஆனால் வேகமாகப் போகும் பாம்பிற்குச் சாரைப் பாம்பு என்றும் பெயர் உண்டாம் என்கிறார் ராம். கி. (4)
அத்துடன், முத்திரப் பிடையன், கோடாலிப் பாம்பு பற்றியும் கேள்விப் பட்டிருக்கிறேன். இவை விசமுள்ள பாம்புகள் என்பர். ஆனால் சாரையைக் கண்டால் யாரும் அங்கு பயப்பட்டதாகத் தெரியவில்லை. இது விவசாயிக்கு தோட்டத்தை நாசம் செய்யும் எலி,தவளை,முயலை இது பிடித்துத் தின்பதால் "விவசாயியின் நண்பன் " என்றும் சொல்லப்படுவதுண்டு.(5) வீடுகளில் வரும் சாரை கோழிக் குஞ்சைத் தின்றுவிடும் என்றும் பயப்படுவர். கோழியின் முட்டையையும் இது தின்பதால் இதனைக் கண்டால் வீடுகளில் துரத்திவிடுவர்.எங்கள் வீட்டில் பாம்ப வித்தியாசமான முறையில் துரதி ஓட்டம் பிடிக்கச் செய்வோம். மண்ணெண்ணையை ஒரு சேலைத் துணியில் நனைத்து நீளமான தடியில்க் கட்டி பாம்பின் முகத்தில் அல்லது உடம்பில் தேய்க்க அது ஒரே ஓட்டமாய் ஓடிவிடும். ஏனென்றால் மண்ணெண்ணை பட்டால் அதற்கு உடம்பு எரிவதுபோல் இருக்குமாம்.

இறுதியாக ஒரு பாடலை கேட்டு மகிழுங்கள். இது பேய் பிசாசு பற்றிய பாட்டு. இதிலே, "சருகுமேலே சாரைப் பாம்பு சர சரக்குதே" என ஒரு வரி வருகிறது.சாரைப் பாம்பென்றாலும் என்றாலும், பாம்பு பாம்புதானே! பயம் வராமல் இருக்குமா?
உசாத்துணை உதவிகள்
1. http://en.wikipedia.org/wiki/Pseudonaja_textilis
2. South-West News Paper 7.3.2007
3. www.burkesbackyard.com.au/1999/archives/25?p=2000
4. http://www.treasurehouseofagathiyar.net/01400/1479.htm
5. http://www.cviewmedia.com/Herp_News%5CHN02707.htm
படம்: www.pbase.com, www.qm.qld.gov.au/features/snakes/snakedetail...
பாடல்:ravianbil.com/kummiruttulae.mp3
________________________________________________________________________________________
படித்துப் பார்த்து உங்க கருத்தைச் சொன்னீங்க என்றால் மிகவும் நன்றியாயிருப்பேன். அன்புடன் செல்லி

"ஒரு குவளை தேநீர்.......".....

அவுஸ்திரேலியாவுக்கு நிரந்தர வசிப்பிடவாதியாக வந்தவுடனே, உடனடியாகச் செய்யப்பட வேண்டிய அலுவல்கள் சில உண்டு. அவை
தொழிலற்றவர்களுக்கு கொடுக்கப்படும் சலுகைப் பணம் (dole) பெறுவதற்கு social security(1997 ற்குப் பின் centerlink என்று மாற்றப்பட்டுள்ளது) யில் பதிவு செய்ய வேண்டும்;
C.E.S இல் (Commonwealth Employment Service -தற்போது தனியார் முகவர் நிலையங்கள் இந்தச் சேவையைச் செய்கின்றன) தொழிலுக்குப் பதிவு செய்யவேண்டும்;
இலவச மருத்துவ வசதியைப் பெற Medicare க்குப் பதிய வேண்டும்;
வங்கியில் புதுக் கணக்கு ஆரம்பிக்க வேண்டும்;
வாடகைக்கு இடம் தேடவேண்டும் என்பனவாகும். இவை தெரிந்தால்த் தான் இக் கவிதை உங்களுக்குப் புரியும்.வந்தநாடும் புதிது
வாய்த்தவரும் புதிது
வயிற்றிலும் புதிது
வாந்தியும் புதிது
வருந்தலைச் சுற்றும் புதிது

வந்ததுமே குந்தியிருந்தா
வந்திடுமா dole உடனே
social security இல் பதிய
C.E.S இல் தொழிலுக்குப் பதிய
வங்கியில கணக்குத் திறக்க
வாடகைக்கு அறை எடுக்க
அடுக்கடுக்காய் இவ்வலுவலுக்கு
அலைஞ்சதனால் தலைசுற்றி
அருந்திடத் தேநீரை
ஆவலாய்த் தேடினேன்
அங்கெலாம் இருந்ததோ கோப்பிக்கடை!

ஊர்க் கோப்பியை நினைத்து
உள்ளே நுழைந்தவுடன்
"ஒரு குவளை கோப்பி"யென்றேன்
"பிரச்சனை" இல்லையென்றவள்,
"கறுப்பா? வெள்ளையா? அதற்குச்
சீனி ஒன்றா? இரண்டா?
Expresso வா? Moccona வா?"
என்றேதேதோ சொன்னாள்...
ஏற்கனவே சுற்றியதலை
இன்னும் சுற்றியது.

ஊர்த் தேநீரை நினைக்க
ஊறியது வாயில் உமிழ்நீர்
"மனதை மாற்றிவிட்டேன், மாறாக
ஒரு குவளை தேநீர் "என்றேன்.
"கவலையில்லை" என்றவள்..
"பச்சையா? கறுப்பா?
English Breakfast ரா?
China Jusmine னா?"
இதைக் கேட்டதும் தலை
இன்னும் சுற்றியது.
"மனமில்லைத் தேநீருக்கு, அதனால்
பச்சைத் தண்ணீர் போதும்" என்றேன்.

விளக்கம்

பிரச்சனை இல்லை - No problem
கவலையில்லை -
No worries
கறுப்பா? -அதாவது, பால் கலக்காதது
வெள்ளையா? -பால் கலந்தது
சீனி ஒன்றா? இரண்டா? - சீனி(சர்க்கரை-தமிழகத்தில்) ஒரு கரண்டியா? இரண்டு கரண்டியா?

Expresso, Moccona -கோப்பியின் வகைகள்
பச்சையா ? - Green tea
கறுப்பா? - Black tea , ஊரிலே இதை plain tea என்பார்கள்.
English Breakfast ,China Jusmine - தேயிலை வகைகள்
___________________________________________________________________
வருகைக்கு நன்றி, ஒரு வரி எழுதீட்டுப் போனீங்க என்றால் அதுக்கும் ஒரு நன்றி. அன்புடன் செல்லி.