கேட்டு மகிழ 9 காணி நிலம் வேண்டும

தொழில்நிமித்தம் நரகத்தில் மன்னிக்கவும் நகரத்தில் வாழும் மக்கள் பாரதியைப் போல் இப்படித்தான் பராசக்தியை வேண்டுவார்களோ?. இப்படி ஒரு அமைதியான இடத்திலும், சூழலிலும் வாழ யாருக்குத்தான் விருப்பம் வராது.

பராசக்தியிடம் பாரதியாரின் வேண்டுதல்தான் என்னே!. நிலத்தோடு, காணியும்(வயல்க் காணி, தோட்டக்காணி)அழகிய தூண்களுடனும், நல்ல மாடங்களுடனும் உ டையதாய் ஒரு மாளிகை; அருகிலே கேணி;தென்னக்கீற்றும்; பக்கத்திலே (ஒன்று இரண்டல்ல) பத்துப் பன்னிரண்டு
தென்னை மரங்களும் -பிள்ளையைப் பெத்து கண்ணீர் வடிக்கிறதைவிட தென்னம்பிள்ளையை வைத்தால் இளநீர் மட்டுமல்ல எததனையோ பயன்களுண்டு என்று பாரதிக்குத் தெரியாமலா இருந்திருக்கும்-; அத்துடன், நிலாவொளி,குயிலோசை,தென்றலும் வேணும் என்கிறார் பாரதியார். இத்தனையும் இருந்து, தனியே வாழ முடியுமா? துணை வேண்டாமா? ஏதோ ஒரு பெண் என்றில்லாமல் பத்தினிப் பெண் வேண்டும் என்கிறார். அப்பதானே சந்தோசம் குடும்ப வாழ்க்கையில் இருக்கும். மாறாக பத்திரகாளியாக இருந்தா வாழ்க்கை எப்படி இருக்கும்?; இனிக்குமா?.

அப்படி ஒரு பத்தினிப் பெண்ணோடு கூடி மகிழ்கையிலே பராசக்தியிடம் கவிதைகளும் தரவேண்டும் என்கிறார். அமைதியற்ற சூழலிலே அதாவது பயமற்ற சூழலிலேதான் பாடி கூடிக் களிக்க முடியுமல்லவா, அதனால்த்தான் பராசக்தியைக் காவலுக்கு வரச் சொல்லுகிறார்.
இறுதியாக, கவிதைகள் தந்தால் போதாது, பராசக்தி ! தன் கவித்திறத்தாலே உலகைப் பாலித்திட வேண்டுகிறார்.
வெளிநாடு வந்து பராசக்தியை என்ன கேட்பது்? 400 சதுர மீற்றர் நிலத்திலவீடு, முற்றமுமில்லை; கோடியுமில்லை(காசில்லையப்பா, வீட்டுக்கு பினனுள்ள நிலத்தைச் சொன்னேன்). தென்னை மரத்துக்கு எங்க இடம்?; தென்றலை எங்க தேடுறது? கோடையில நெருப்பு மாதிரி காற்று, குளிகாலத்தில பனிக் காற்று.

நல்ல துணை கிடைச்சா அதைவிட அதிஷ்டம் வேறு என்ன? அதுதான் இங்க குதிரைக் கொம்பாச்சே! எல்லாம் கிடைச்ச பின் ,பாரதி பத்தினிப் பெண் கேட்கிறார்.பத்தினிப் பெண்ணோ , பொறுப்புள்ள புருஷனோ கிடைச்சா எல்லாம் கிடைச்ச மாதித்தானே! "பராசக்தி! இந்த வரம் மட்டும் தந்தாபோதும்" என்றல்லவோ இங்கு இன்றைய வாழ்க்கையிருக்கிறது.
என்னை கவர்ந்த பாடல் இது.


காணி நிலம் வேண்டும் - பராசக்தி
காணி நிலம் வேண்டும், - அங்கு
தூணில் அழகியதாய் - நன்மாடங்கள்
துய்ய நிறத்தினதாய் - அந்தக்
காணி நிலத்தினிடையே - ஓர்மாளிகை
கட்டித் தரவேண்டும் - அங்கு
கேணியருகினிலே - தென்னைமரம்
கீற்று மிளநீரும்.

பத்துப் பன்னிரண்டு - தென்னைமரம்
பக்கத்திலே வேணும் - நல்ல
முத்துச் சுடர்போலே - நிலாவொளி
முன்பு வரவேணும், அங்கு
கத்துங் குயிலோசை - சற்றே வந்து
காதிற் படவேணும், - என்றன்
சித்தம் மகிழ்ந்திடவே - நன்றாயிளந்
தென்றல் வரவேணும்.

பாட்டுக் கலந்திடவே - அங்கேயொரு
பத்தினிப் பெண்வேணும் - எங்கள்
கூட்டுக் களியினிலே - கவிதைகள்
கொண்டுதர வேணும் - அந்தக்
காட்டு வெளியினிலே - அம்மா! நின்றன்
காவலுற வேணும், - என்றன்
பாட்டுத் திறத்தாலே - இவ்வையத்தைப்
பாலித்திட வேணும்.

பாடலை கேட்க

1. பாடியவர்: Visalakshi Nityanand
ராகம்: பந்துவராளி
தாளம்: ஆதி

2. பாடியவர்: Rajkumar Bharathi
ராகம்:பிந்து மாலினி
தாளம்:ஆதி

நன்றி: musicindiaonline.com

___________________________________________________________________________________________

இலக்கிய இன்பம்-1 சிலேடைக் கவிதை

சிலேடைக் கவிதை என்றால் சொல் அமைப்பில் ஒரு சொல்லாக வந்தாலும் இரண்டு அல்லது மூன்று அர்த்தத்தைக் கொண்டிருக்கும் பாடல் ஆகும்.
சிலேடைக் கவிபாட காளமேகப் புலவருக்கு நிகராக யாருமில்லை என்றே சொல்லலாம். இதோ தேங்காய்க்கும் நாய்க்கும் இரு பொருள்பட பாடப்பட்ட பாடல் !


“ஓடும் இருக்குமத னுள்வாய் வெளுத்திருக்கும்
நாடுங் குலைதனக்கு நாணாது –சேடியே
தீங்காய தில்லாத் திருமலைரா யன் வரையில்
தேங்காயு நாயுந் தெரி”

முதல் இரு அடிகளையும் நோக்கினால் தேங்காய்க்கும் நாய்க்கும் பொருள்படப் பாடியிருப்பதைக் காணலாம்.

தேங்காய் :
இதற்கு ஓடு இருக்கிறது, உடைத்துப் பார்த்தால் உட்பக்கம் வெளுத்திருக்கும். குலையாகக் காய்க்கும்.அக் குலை நிறைய காய்களைக் கொண்டிருப்பதால் தாங்குமோ தாங்காதோவென்று பயப்படாது (நாணாது) .

நாய்
நாய் ஓடும்.
அதாவது நாய் ஓடும், இருக்கும் ஒரு இடத்தில் நில்லாது. அதன் உள்வாயும் வெளுத்திருக்கும்.

யாரும் அந்நியரைக் கண்டால் குலைக்கும்.
அப்படி குலைப்பதற்கு வெட்கப்படாது(நாணாது).
இப்பாடலில் கவிஞரின் கவித்திறனை வியக்காமல் இருக்க முடியாது.படிக்கப் படிக்கத் தெவிட்டாத கவிதை.


எழுதிவர்: செல்லி

அடுத்த பதிவில் மூன்று பொருள்படப் பாடப்பட்ட கவிதையைக் நோக்கலாம்.
___________________________________________________________________

வந்ததுதான் வந்தீர்கள், உங்கள் கருத்தையும் சொல்லுங்கள்.

கேட்டு மகிழ (5) கண்ணம்மா என் காதலி

கண்ணனைக் காதலியாக கற்பனை செய்து பாடும் பாடல் இது.
காதல் என்றால் காத்திருப்பது தவிர்க்க முடியாததாகிவிடுகிறது.
இந்தக் காதலில் ஜீவாத்மா பரமாத்மாவுக்காக காத்திருக்கின்றது."பார்த்த இடத்திலெல்லாம் உன்னைப் போலவே பாவை தெரியுதடி" என்பது எங்கும் நீக்கமற நிறைந்த பரமாத்மாவைக் குறிப்பிடுகிறது. தெய்வத் தன்மையிலிருந்து சற்றும் வழுவாது பாரதியார் கண்ணனைக் காதலியாக வைத்துப் பாடுகிறார்.மிகவும் கருத்துள்ள பாடல்.இதில் கடைசி இரு பாடல்களும் ஒலிவடிவில் இடம்பெறவில்லை.
பாடியவர்கள்: Bombay sisters. பாடலைக் கேட்க
பாடியவர்: S.P. பாலசுப்பிரமணியம். பாடலைக் கேட்க
படம்: வறுமையின் நிறம் சிவப்பு. இப் பாடலை இப் பதிவிற்கு தந்தவர் : தி.ரா.ச.தீர்த்தக் கரையினிலே

தீர்த்தக் கரையினிலே தெற்கு மூலையில் ஷெண்பகத் தோட்டத்திலே
பார்த்திருந்தால்
வருவேன் வெண்ணிலாவிலே பாங்கியோடென்று சொன்னாய
வார்த்தை தவறிவிட்டாய் அடி
கண்ணம்மா மார்பு துடிக்குதடி
பார்த்த இடத்திலெல்லாம் உன்னைப் போலவே பாவை தெரியுதடி


(தீர்த்தக்)

மேனி கொதிக்குதடி தலை சுற்றியே வேதனை செய்குதடி
வானின் இடத்தையெல்லாம் இந்த வெண்ணிலா வந்து தழுவுது பார்
மோனத்திருக்குதடி இந்த வையகம் மூழ்கித் துயிலினிலே
நானொருவன் மட்டிலும் பிரிவென்பதோர் நரகத் துழலுவதோ


கடுமை யுடைய தடீ! - எந்த நேரமும்
காவலுன் மாளிகையில்;
அடிமை புகுந்த பின்னும் - எண்ணும்போது நான்
அங்கு வருவதற் கில்லை;
கொடுமை பொறுக்க வில்லை - கட்டுங் காவலும்
கூடிக் கிடக்கு தங்கே;
நடுமை யரசி யவள் - எதற்காகவோ
நாணிக் குலைந்திடுவாள். ...

கூடிப் பிரியாமலே - ஓரி ரவெலாம்
கொஞ்சிக் குலவி யங்கே,
ஆடி விளை யாடியே, - உன்றன் மேனியை
ஆயிரங்கோடி முறை
நாடித் தழுவி மனக் - குறை தீர்ந்து நான்
நல்ல களி யெய்தியே,
பாடிப் பரவசமாய் - நிற்கவே தவம்
பண்ணிய தில்லை யடி! ...இந்தப் பாடல் "வறுமையின் நிறம் சிவப்பு"என்ற படத்தில் S.P. பால்சுப்பிரமணியம் மிகவும் அருமையாகப் பாடுகிறார்.

வந்ததுதான் வந்தீங்க, உங்க கருத்தையும் சொல்லீட்டு போங்க.


கேட்டு மகிழ (4) நல்லதோர் வீணை

சிவசக்திமீது பாரதியின் அளவற்ற பக்தியைக் காட்டும் அருமயான பாடல் இது.
"தசையினை தீச்சுடினும்
சிவசக்தியை பாடும் நல்அகம் கேட்டேன்" என்று என்ன வரம் கேட்கிறார் பாருங்கள்! கவி ஆற்றல மிக்க இந்த கவிஞன் வாழ்கின்ற காலத்தில் யாரும் அவன் கவித்திறனைக் கண்டுகொள்ளவுமில்லை; நல்லதொரு வீணை இந்த்க் கவிஞன். அவனை கடைசிவழி போகும்வரை அந்தப் பெருங்கவிஞனை யாரும் பாராட்டவுமில்லை.
"மாநிலம் பயனுற வாழ்வதற்கே
நிலச்சுமையென வாழ்ந்திட புரிகுவையோ"
இந்த வரிகளிலே பாரதியின் பொதுநலத்தைப் பாருங்கள். பூமிக்குப் பாரமாக அன்றி பூமிக்கு பயனுற வாழ அருள் செய் என்று கேட்கிறார். இந்த பொதுநோக்கு சாதாரணமானவர்க்கு வராது,மெஞ்ஞானிகளுக்குத்தான் வரும். அஞ்ஞானிகள் கடவுளிடம் தமக்கு போலி கௌரவத்தைத் தரும் பெரியவீடு, புது கார், பெரிய உத்தியோகம், உயர்ந்த பதவி, நன்மக்கள் என்பன வேண்டித்தான் கும்பிடுகிறார்கள். நேர்த்தி வைக்கிறார்கள்.இவர்கட்கு மண்நலத்தைவிட
தன்னலம்தான் முன்னிற்கும். மாநிலம் பயனுற செய்யமுடியாவிட்டாலும், நாலுசனம் பயனுற நாமும் ஏதும் செய்யலாந்தானே!

இந்தப் பாடலைக் கேட்கும் போதெல்லாம பிறந்த மண் ஞாபகந்தான் வரும்.
எப்போதுமே பசுமையும், வளமும் கொளிக்கும் அந்த நல்ல மண்ணிலே இப்படி நாளாந்தம் குண்டு, வெடி பொழிந்து, குண்டும் குழியும், புழுதியுமாய்க் கிடக்கிறது. அந்த மண்ணின் அமைதிக்காக தினமும் சிவசக்தியை வேண்டுகிறேன்.
மேலும்,
வெளிநாட்டுக்கு வந்தபின் பிறந்த நாட்டில் பெற்ற உயர்கல்வித் தராதரங்களுக் கேற்ற வேலை கிடைக்காமலும், தம் கல்வித் தமைக்கேற்ற ஒரு வேலை கூடக் கிடைக்காமலும் இருப்பவர்க்கும் இந்தப் பாடல் இதயத்தை இதமாக்கிச் செல்லும்.
கஷ்டப் பட்டு படித்தோரை
நஷ்டப் பட இங்கே விடுதல் நலந்தானோ?

இதோ இனி இப்பாடலைக் கேட்டு மகிழுங்கள்.

நியூயோர்க் ராஜா இசையில் உன்னிக் கிருஷ்ணன் பாடியது
சிறீகாந் இசையில் சிறீனி பாடியது
மதுவந்தி ராகத்தில் நித்யசிறீ பாடியது
பாரதி படத்தில், இளையராஜா,மனோ பாடிய பாடல்

(இப் பாடலை இப் பதிவுக்கு தந்தவர்:
ஹரிஹரன் . நன்றி: )

நல்லதோர் வீணை செய்தே
அதை நலம் கெட புழுதியில் எறிவதுண்டோ

சொல்லடி சிவசக்தி
எனை சுடர்மிகும் அறிவுடன் படைத்து விட்டாய்

வல்லமை தாராயோ
இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே
நிலசுமையென வாழ்ந்திட புரிகுவையோ

விசையுறு பந்தினைப் போல்
உள்ளம் வேண்டியபடி
செல்லும் உடல் கேட்டேன்
நசையறு மனம் கேட்டேன்

நித்தம் நவமென சுடர் தரும் உயிர்கேட்டேன்
தசையினை தீச்சுடினும்
சிவசக்தியை பாடும் நல்அகம் கேட்டேன்
அசைவுறு மதி கேட்டேன்
இவை அருள்வதில் உனக்கெதும் தடையுளதோ?

நல்லதோர் வீணை செய்தே
அதை நலம் கெட புழுதியில் எறிவதுண்டோ

____________________________________________________________________

இனி உங்க கருத்தையுந்தான் சொல்லுங்களேன்.

கேட்டு மகிழ (3) கடுவெளி சித்தரின் பாடல்கள்

அஞ்ஞான இருளைப் போக்கி மெஞ்ஞானச் சிந்தனைகளைச் சித்தர் பாடல்களில் காணலாம் . எத்தனையோ சித்தர்கள் முன்பு தத்துவப் பாடல்கள் மட்டுமல்ல சோதிடம், மருத்துவம் பற்றியும் நூல்கள் பல எழுதியிருக்கிறார்கள். எனக்கு மிகவும் பிடித்தவை கடுவெளி சித்தரின் பாடல்கள்தான். நவீன இசையமைப்பிலான ஒலிவடிவில் இங்கே அவற்றை கேட்டு மகிழலாம். அத்த்டன் இந்த ஒலிவடிவத்தை தரவிறக்கம் செய்தும் எப்பவும் கேட்டு மகிழலாம். சிறீகாந் என்பவரின் இசையில் சுரேன், சுந்தர்,சிறீகாந்
ஆகியோப் பாடுகின்றனர்.
பல்லவி முதற்கொண்டு தொடர்ந்து வரும் 11 சரணங்களில் 2 ம், 3 ம், 5 ம் சரணங்கள் இந்த ஒலிவடிவில் இடம்பெறவில்லை.

கடுவெளிச் சித்தர்

பல்லவி

பாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக்

கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான்

பாபஞ்செய் யாதிரு மனமே

சரணம் 4

நந்த வனத்திலோ ராண்டி - அவன்

நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டிக்

கொண்டுவந் தானொரு தோண்டி - மெத்தக்

கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி. (பாபஞ்செய் யாதிரு)

சரணம் 6

நல்ல வழிதனை நாடு- எந்த
நாளும் பரமனை நத்தியே தேடு
வல்லவர் கூட்டத்திற் கூடு - அந்த
வள்ளலை நெஞ்சினில் வாழ்த்திக் கொண்டாடு.

சரணம் 7

நல்லவர் தம்மைத் தள்ளாதே - அறம்

நாலெட்டில் ஒன்றேனும் நாடித்தள் ளாதே

பொல்லாக்கில் ஒன்றுங்கொள்ளாதே - கெட்ட

பொய்மொழிக் கோள்கள் பொருந்த விள்ளாதே.

சரணம் 8

வேத விதிப்படி நில்லு - நல்லோர்

மேவும் வழியினை வேண்டியே செல்லு

சாத நிலைமையே சொல்லு - பொல்லாச்

சண்டாளக் கோபத்தைச் சாதித்துக் கொல்லு.

சரணம் 9

பிச்சையென் றொன்றுங்கே ளாதே - எழில்
பெண்ணாசை கொண்டு பெருக்கமாளாதே
இச்சைய துன்னையாளாதே - சிவன்
இச்சை கொண்டதவ்வழி யேறிமீளாதே. 9

சரணம் 10

மெஞ்ஞானப் பாதையி லேறு - சுத்த
வேதாந்த வெட்ட வெளியினைத் தேறு
அஞ்ஞான மார்க்கத்தைத் தூறு - உன்னை
அண்டினோர்க் கானந்த மாம்வழி கூறு. 10

சரணம் 11

மெய்குரு சொற்கட வாதே - நன்மை
மென்மேலுஞ் செய்கை மிகவடக்காதே
பொய்க்கலை யால்நடவாதே - நல்ல
புத்தியைப் பொய்வழி தனில் நடத்தாதே.( நந்த வனத்திலோ)

பாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக்
கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான்
பாபஞ்செய் யாதிரு மனமே.
________________________________________________
வந்ததுதான் வந்தீங்க, உங்க கருத்தையும் சொல்லீட்டுப் போங்களேன்.

கேட்டு மகிழ (2) காயிலே புளிப்ப்தென்னே?

"நிற்பதுவே நடப்பதுவே" என்ற பாட்டில் எங்கும் "காண்பது சக்தியாம்"என்னும் பாரதியார் கீழ்வரும் பாடலில் எங்கும் எதிலிம் கண்ணனைக் காண்கிறார். அதாவது, காய், கனி, காற்று, திக்கிலே மட்டுமல்ல நோய்,விரதம்,கனவு, சூடு, குளிர், என்பவற்றிலும் கண்ணனைக் காண்கிறார். கண்ணனை நாம் ஏற்று நின்றால், போற்றி நின்றால் அவன் எமைக் காத்து நிற்பான். மெய்யரைக் காப்பான்; பொய்யரை மாய்ப்பான்.

பாரதி பாடல்கள் ஒவொன்றுமே தனித்தன்மை வாய்ந்தவை. படிக்கப் படிக்கத் தெவிட்டாதவை; கேட்கக் கேட்க இனிமயானவை. இந்தப் பாடலைக் சுதா ரகுநாதன் பிந்து மாலினி ராகத்தில் பாடியிருக்கிறார். நீங்களும் இங்கே கேட்கலாம்.

கண்ண பெருமானே

காயிலே புளிப்ப்தென்னே? கண்ண பெருமானே,
கனியிலே இனிப்பதென்னே? கண்ண பெருமானே,
நோயிலே படுப்பதென்னே? கண்ண பெருமானே,
நோன்பிலே உயிர்ப்பதென்னே? கண்ண பெருமானே
காற்றிலே குளிர்ந்ததென்னே? கண்ண பெருமானே
கனவிலே சுடுவதென்னே? கண்ண பெருமானே,
திக்கிலே தௌiந்நதென்னே? கண்ண பெருமானே,
ஏற்று நின்னைத் தொழுவதென்னே? கண்ண பெருமானே,
எளியர் தம்மைக் காப்பதென்னே? கண்ண பெருமானே
போற்றினோரைக் காப்பதென்னே? கண்ண பெருமானே,
பொய்யர் தம்மை மாய்ப்பதென்னே? கண்ண பெருமானே.

கேட்டு மகிழ (1) நிற்பதுவே, நடப்பதுவே,

பாரதியார் ஒரு விஞ்ஞானி.தற்போது பரபரப்பாக பேசப்படும் வேச்சுவல் றியாலிற்றியை (virtual reality) எப்பவோ கண்டுபிடித்துவிட்டார்.உண்மையைப் போலத் தெரியும் ஆனால் அது உண்மையல்ல. அதாவது காண்பதெல்லாம் மாயை என்கிறார் பாரதியார்.அவர் ஒரு மெஞ்ஞானிதான். மெஞ்ஞானிகளுக்கு மட்டும்தான் இவை மாயை என்று தெரியும், மற்றவர்க்கு இவை உண்மைபோலத் தோன்றும்.இந்த பாடலை படித்துப் பாருங்கள் புரியும். எனக்குப் பிடித்த வரிக்ள்
"காண்பதெல்லாம் மறையுமென்றால் மறைந்ததெல்லாம் காண்பமன்றோ? -என்னே லொஜிக்(logic)!
வீண்படு பொய்யிலே -நித்தம் விதிதொடர்ந் திடுமோ?"
இந்தப் பாடலைக் கேட்க இங்கே சொடுக்கவும.

இந்தப் பாடல் "பாரதி" திரைப்படத்தில் வருகிறது. கேட்கக் கேட்கத் தெவிட்டாத பாடல். ஆன்மீகக் கருத்துள்ள பாடல். இதைக் கேட்டுக்கொண்டே இயற்கைக் காட்சியைப் பாருங்கள், அப்படியே மெய்...... மறந்து விடுவீர்கள்.

பாரதியாரின் ஞானப்பாடல்
உலகத்தை நோக்கி வினவுதல்

நிற்பதுவே, நடப்பதுவே,பறப்பதுவே நீங்களெல்லாம்
சொற்பனந்தானோ? பல தோற்றமயக்கங்களோ?
கற்பதுவே,கேட்பதுவே,கருதுவதே நீங்களெல்லாம
அற்பமாயைகளோ? உம்முள் ஆழ்ந்தபொருளில்லையோ?

வானகமே,இளவெயிலே,மரச்செறிவே நீங்களெல்லாம்
கானலின் நீரோ? வெறும்காட்சிப் பிழைதானோ?
போனதெல்லாம் கனவினைப்போல் புதைந்தழிந்தே போனதனால்
நானும் ஓர் கனவோ?-இந்த ஞாலமும் பொய்தானோ?

காலமென்றே ஒரு நினைவும் காட்சியென்றெ பலநினைவும்
கோலமும் பொய்களோ?அங்கு குணங்களும் பொய்களோ?
சோலையிலே மரங்களெல்லாம் தோன்றுவதோர் விதையிலென்றால்
சோலை பொய்யாமோ? இதைச் சொல்லொடு சேர்ப்பாரோ?

காண்பதெல்லாம் மறையுமென்றால் மறைந்ததெல்லாம் காண்பமன்றோ?
வீண்படு பொய்யிலே -நித்தம் விதிதொடர்ந் திடுமோ?
காண்பதிலே உறுதிகொண்டோம் காண்பதெல்லாம உறுதியில்லை
காண்பது சக்தியாம் -இந்தக் காட்சி நித்தியமாம்

உங்கள் கருத்தையும் சொல்லுங்களேன்.

பரிசுக் கட்டுரை

புலம்பெயர்ந்தோர் கலாச்சாரப் பிரச்சனைளும்
அவறைத் தீர்ப்பதற்கான வழிகளும்இந்தக் கட்டுரை 1991ல் மெல்போன் நகரில் நடாத்தப்பட்ட கட்டுரைப் போட்டியில் முதல் பரிசு பெற்றது.முதன்முதலாக அவுஸ்ரேலியாவுக்கு வந்தேறு குடிமக்களில் ஒருவராக வந்து 6 மாதத்தின் பின் இக் கட்டுரைப் போட்டியில் கலந்து எழுதினேன்.ஆனால் தற்பொழுது நிறைய பிரச்சனைகள் புலம் பெயர்ந்தவர்களுக்கு உள்ளன.


எழுதியவர்:செல்லி

பக்கங்கள் ஒவொன்றையும் சொடுக்கவும். எழுத்துகளை பெரிதாக பார்த்து வாசிக்கலாம்.

பேரனின் ஆசை

கவிதை

குரக்கன் புட்டு ஒடியல் கூழ்
உழுந்தங்கழி உண்டதெல்லாம்
ஆச்சி அப்பு அந்தக்காலம்

உறைக்கும் கறி சோறு
உருசியான இடியப்பம் புட்டு
உப்புமா தோசை இட்லி
தினந்தினம் தின்கிறார்கள்
அம்மாஅப்பா இந்தக்காலம்

சீஸ்பேகர் ஹாம்பேகர்
சுடுநாயாம் ஏதோ ஹொட்டோக்
சிப்ச் என்ன கோக் என்ன
பிஸ்சாவாம் பாஸ்ற்ராவாம்
பிடிக்குமாம் தின்றுகொள்ள
பிள்ளைகளுக்கு எப்பவுமே

மிலேனியம் பிறந்த பின்னே
மலரப் போகும் மொட்டே
மழலை பேசவரும் சிட்டே
சுழலுமிந்த் உலகில்வந்து
என்ன தின்னப்போகிறாய்?
சொந்தமுள்ளா பேரனுக்கு
சேதி என்னசொல்லுவாய்?

கொழுந்துவிடும் என்நெஞ்சிலே
கொள்ளை கொள்ளை ஆசை
உன்னைத் தூக்கி நான்தவழ்ந்த
ம்ண்ணில் விட ஆசை
முற்றத்து ஒற்றைப்பனை
உயரம் காட்ட ஆசை
ஒற்றைப்பிலா இலைமடித்து
கூழ்குடிக்க ஆசை
சுற்றியுள்ள தோட்டமெல்லாம்
பச்சை காட்ட ஆசை
சுடுசுடு குரக்கன் புட்டும்
சுவைக்கச் சக்கரையும்போட்டு
நீசாப்பிட நான்பாத்திட அந்த
ஆச்சியப்பு காலத்தை உன்னக்குக்
காட்ட ஆசை.

பேரனை போல் நீயிருந்தா
என்பேச்சையும்தான் கேட்பியா?
பிறந்த மண்ணைப் பார்க்க
விரும்பி நீயும்வருவியா?
கூடுவிட்டு உயிர்போனால்
கொள்ளி போட்டுவிடுவியா?

எழுதியவர்: செல்லி

மிலேனியம் பிறக்கப் போகிற காலத்தில் எழுதிய கவிதை. யாழ்ப்பாணம் திரும்பிப் போய் வாழ ஆசை. கனவு பலிக்குமா?
இந்த கவிதை பற்றிய உங்கள் கருத்தையும் சொல்லுங்களேன்.