பேரனின் ஆசை

கவிதை

குரக்கன் புட்டு ஒடியல் கூழ்
உழுந்தங்கழி உண்டதெல்லாம்
ஆச்சி அப்பு அந்தக்காலம்

உறைக்கும் கறி சோறு
உருசியான இடியப்பம் புட்டு
உப்புமா தோசை இட்லி
தினந்தினம் தின்கிறார்கள்
அம்மாஅப்பா இந்தக்காலம்

சீஸ்பேகர் ஹாம்பேகர்
சுடுநாயாம் ஏதோ ஹொட்டோக்
சிப்ச் என்ன கோக் என்ன
பிஸ்சாவாம் பாஸ்ற்ராவாம்
பிடிக்குமாம் தின்றுகொள்ள
பிள்ளைகளுக்கு எப்பவுமே

மிலேனியம் பிறந்த பின்னே
மலரப் போகும் மொட்டே
மழலை பேசவரும் சிட்டே
சுழலுமிந்த் உலகில்வந்து
என்ன தின்னப்போகிறாய்?
சொந்தமுள்ளா பேரனுக்கு
சேதி என்னசொல்லுவாய்?

கொழுந்துவிடும் என்நெஞ்சிலே
கொள்ளை கொள்ளை ஆசை
உன்னைத் தூக்கி நான்தவழ்ந்த
ம்ண்ணில் விட ஆசை
முற்றத்து ஒற்றைப்பனை
உயரம் காட்ட ஆசை
ஒற்றைப்பிலா இலைமடித்து
கூழ்குடிக்க ஆசை
சுற்றியுள்ள தோட்டமெல்லாம்
பச்சை காட்ட ஆசை
சுடுசுடு குரக்கன் புட்டும்
சுவைக்கச் சக்கரையும்போட்டு
நீசாப்பிட நான்பாத்திட அந்த
ஆச்சியப்பு காலத்தை உன்னக்குக்
காட்ட ஆசை.

பேரனை போல் நீயிருந்தா
என்பேச்சையும்தான் கேட்பியா?
பிறந்த மண்ணைப் பார்க்க
விரும்பி நீயும்வருவியா?
கூடுவிட்டு உயிர்போனால்
கொள்ளி போட்டுவிடுவியா?

எழுதியவர்: செல்லி

மிலேனியம் பிறக்கப் போகிற காலத்தில் எழுதிய கவிதை. யாழ்ப்பாணம் திரும்பிப் போய் வாழ ஆசை. கனவு பலிக்குமா?
இந்த கவிதை பற்றிய உங்கள் கருத்தையும் சொல்லுங்களேன்.

10 Responses to “பேரனின் ஆசை”

பழைய நினைவுகளைப் படிக்கும் போது இயலாமை கலந்த பெருமூச்சு வருகின்றது

//பழைய நினைவுகளைப் படிக்கும் போது இயலாமை கலந்த பெருமூச்சு வருகின்றத//
90% பழைய நினைவுகள்டன்தானே இங்கு வாழ்கிறோம்.
இங்கு வாழும் ம்ற்றய நாட்டவர் போல விரும்பிய நேரத்தில் போக முடியாமல் ஏக்கத்துடன் வாழவேண்டியிருக்கிறது.
மேலும் மீண்டும் உங்கள் வருகைக்கு மிக நனறி.

இந்த ஏக்கம் தீர வேண்டும்.
பழைய நினைவுகள் எல்லோருக்கும் உண்டு.ஆனால் இந்தப் பாட்டின் வரிகள் சுடுகிறது.
புத்தாண்டிலாவது
நல்லது நடக்கட்டும்.

வருகைக்கு நன்றி வல்லி.
உங்கள் கருத்துக்கும் நன்றி.மீண்டும் வாருங்கள்.
//பழைய நினைவுகள் எல்லோருக்கும் உண்டு.//
நிச்சயமாக.
//புத்தாண்டிலாவது நல்லது நடக்கட்டும்.// அதற்காக தினம்
இறைவனைத்தான் வேண்டுகின்றேன்

//பேரனை போல் நீயிருந்தா
என்பேச்சையும்தான் கேட்பியா?
பிறந்த மண்ணைப் பார்க்க
விரும்பி நீயும்வருவியா?
கூடுவிட்டு உயிர்போனால்
கொள்ளி போட்டுவிடுவியா?//

வணக்கம் செல்லி அவர்களே!
கடந்த கால நினைவுகளையும், அது இல்லாத போன போது ஏற்பட்ட வெறுமையையும், அது மறுபடி கிடைக்க விரும்பும் ஏக்கத்தையும் ஒரே கவிதையில் அழகாக வெளிப்படுத்தி இருக்கிறீர்கள்.

நம்மில் பலரும் இப்படித் தான் ஒன்றை இழந்து விட்டு அதை வாழ்நாள் முழுதும் தேடும் வாழ்க்கையை வாழ்கின்றோம் என நினைக்கிறேன். எனக்கும் இதைப் படித்ததும் என் பிள்ளைப் பருவமும், பெற்றோர் அருகிருந்த நாட்களும் நினைவுக்கு வந்து ஏக்கத்தை ஏற்படுத்துகிறது.

வணக்கம் கைப்புள்ள
//நம்மில் பலரும் இப்படித் தான் ஒன்றை இழந்து விட்டு அதை வாழ்நாள் முழுதும் தேடும் வாழ்க்கையை வாழ்கின்றோம் என நினைக்கிறேன்.//
தாய் நாட்டைவிட்டு வெளிநாட்டில் வாழ்கிற எல்லாருக்கும் இதே தேடல்தான்.

// என் பிள்ளைப் பருவமும், பெற்றோர் அருகிருந்த நாட்களும் நினைவுக்கு வந்து ஏக்கத்தை ஏற்படுத்துகிறது.//
அந்தப் பசுமையான நினைவுகளுடன் மீதிக்காலமும் போய்விடும்.
முத முதலா வூட்டுக்கு வந்திருக்கீங்க கொத்து ரொட்டி சாப்பிட்டுவிட்டுப் போங்க.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. மீண்டும் வருக.

Anonymous said...

உங்கள் ஆசைகள்
விரைவில் நிறைவேற
எல்லாம் வல்ல
இறைவன் அருள்
புரியட்டும்.

உங்க வருகைக்கும், ஆசிக்கும் நன்றி அனானி அவர்களே!

Anonymous said...

செல்லி அக்கா,
எல்லோர் மனசில் இருக்கும் ஆசையும் அதுதான்...எங்கள் மண்ணில் எங்கள் மண மணக்கும் அம்மாவின் கைவண்ணச் சமையல். ஆஹா..திருவெம்பாவை, களி, புட்டு. இதெல்லாம் திரும்பக் கிடைக்குமா என்ன? அதுசரி...உங்கட அடுப்படிப்பக்கம் நுழைஞ்சன் ஒண்டையும் காணோம்.

திருவெம்பாவை, களி, புட்டு செய்முறை தெரிஞ்சா சொல்லுங்கோ அக்கா...ஆசையாக் கிடக்கு சாப்பிட்டுப் பார்க்க.

மீனா.
திருகோணமலை. ஈழம்.

மீனா தங்கச்சி
வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி

//திருவெம்பாவை, களி, புட்டு செய்முறை தெரிஞ்சா சொல்லுங்கோ அக்கா...ஆசையாக் கிடக்கு சாப்பிட்டுப் பார்க்க.//
திருகோணமலையில இருந்தும் இவை உங்கள்க்கு கிடைக்கேலையொ?
அடுத்தமுறை அடுப்படிக்கு வாருங்கோ.