கேட்டு மகிழ 9 காணி நிலம் வேண்டும

தொழில்நிமித்தம் நரகத்தில் மன்னிக்கவும் நகரத்தில் வாழும் மக்கள் பாரதியைப் போல் இப்படித்தான் பராசக்தியை வேண்டுவார்களோ?. இப்படி ஒரு அமைதியான இடத்திலும், சூழலிலும் வாழ யாருக்குத்தான் விருப்பம் வராது.

பராசக்தியிடம் பாரதியாரின் வேண்டுதல்தான் என்னே!. நிலத்தோடு, காணியும்(வயல்க் காணி, தோட்டக்காணி)அழகிய தூண்களுடனும், நல்ல மாடங்களுடனும் உ டையதாய் ஒரு மாளிகை; அருகிலே கேணி;தென்னக்கீற்றும்; பக்கத்திலே (ஒன்று இரண்டல்ல) பத்துப் பன்னிரண்டு
தென்னை மரங்களும் -பிள்ளையைப் பெத்து கண்ணீர் வடிக்கிறதைவிட தென்னம்பிள்ளையை வைத்தால் இளநீர் மட்டுமல்ல எததனையோ பயன்களுண்டு என்று பாரதிக்குத் தெரியாமலா இருந்திருக்கும்-; அத்துடன், நிலாவொளி,குயிலோசை,தென்றலும் வேணும் என்கிறார் பாரதியார். இத்தனையும் இருந்து, தனியே வாழ முடியுமா? துணை வேண்டாமா? ஏதோ ஒரு பெண் என்றில்லாமல் பத்தினிப் பெண் வேண்டும் என்கிறார். அப்பதானே சந்தோசம் குடும்ப வாழ்க்கையில் இருக்கும். மாறாக பத்திரகாளியாக இருந்தா வாழ்க்கை எப்படி இருக்கும்?; இனிக்குமா?.

அப்படி ஒரு பத்தினிப் பெண்ணோடு கூடி மகிழ்கையிலே பராசக்தியிடம் கவிதைகளும் தரவேண்டும் என்கிறார். அமைதியற்ற சூழலிலே அதாவது பயமற்ற சூழலிலேதான் பாடி கூடிக் களிக்க முடியுமல்லவா, அதனால்த்தான் பராசக்தியைக் காவலுக்கு வரச் சொல்லுகிறார்.
இறுதியாக, கவிதைகள் தந்தால் போதாது, பராசக்தி ! தன் கவித்திறத்தாலே உலகைப் பாலித்திட வேண்டுகிறார்.
வெளிநாடு வந்து பராசக்தியை என்ன கேட்பது்? 400 சதுர மீற்றர் நிலத்திலவீடு, முற்றமுமில்லை; கோடியுமில்லை(காசில்லையப்பா, வீட்டுக்கு பினனுள்ள நிலத்தைச் சொன்னேன்). தென்னை மரத்துக்கு எங்க இடம்?; தென்றலை எங்க தேடுறது? கோடையில நெருப்பு மாதிரி காற்று, குளிகாலத்தில பனிக் காற்று.

நல்ல துணை கிடைச்சா அதைவிட அதிஷ்டம் வேறு என்ன? அதுதான் இங்க குதிரைக் கொம்பாச்சே! எல்லாம் கிடைச்ச பின் ,பாரதி பத்தினிப் பெண் கேட்கிறார்.பத்தினிப் பெண்ணோ , பொறுப்புள்ள புருஷனோ கிடைச்சா எல்லாம் கிடைச்ச மாதித்தானே! "பராசக்தி! இந்த வரம் மட்டும் தந்தாபோதும்" என்றல்லவோ இங்கு இன்றைய வாழ்க்கையிருக்கிறது.
என்னை கவர்ந்த பாடல் இது.


காணி நிலம் வேண்டும் - பராசக்தி
காணி நிலம் வேண்டும், - அங்கு
தூணில் அழகியதாய் - நன்மாடங்கள்
துய்ய நிறத்தினதாய் - அந்தக்
காணி நிலத்தினிடையே - ஓர்மாளிகை
கட்டித் தரவேண்டும் - அங்கு
கேணியருகினிலே - தென்னைமரம்
கீற்று மிளநீரும்.

பத்துப் பன்னிரண்டு - தென்னைமரம்
பக்கத்திலே வேணும் - நல்ல
முத்துச் சுடர்போலே - நிலாவொளி
முன்பு வரவேணும், அங்கு
கத்துங் குயிலோசை - சற்றே வந்து
காதிற் படவேணும், - என்றன்
சித்தம் மகிழ்ந்திடவே - நன்றாயிளந்
தென்றல் வரவேணும்.

பாட்டுக் கலந்திடவே - அங்கேயொரு
பத்தினிப் பெண்வேணும் - எங்கள்
கூட்டுக் களியினிலே - கவிதைகள்
கொண்டுதர வேணும் - அந்தக்
காட்டு வெளியினிலே - அம்மா! நின்றன்
காவலுற வேணும், - என்றன்
பாட்டுத் திறத்தாலே - இவ்வையத்தைப்
பாலித்திட வேணும்.

பாடலை கேட்க

1. பாடியவர்: Visalakshi Nityanand
ராகம்: பந்துவராளி
தாளம்: ஆதி

2. பாடியவர்: Rajkumar Bharathi
ராகம்:பிந்து மாலினி
தாளம்:ஆதி

நன்றி: musicindiaonline.com

___________________________________________________________________________________________

5 Responses to “கேட்டு மகிழ 9 காணி நிலம் வேண்டும”

அழகி said...

செல்லி
ந்ல்லாய் எழுதியிருக்கிறியள். வழ்த்துக்கள்

என்ர பதிவையும் பாருங்கோ.
http://www.azhaki.blogspot.com/

அழகி

வருகைக்கு நன்றி.

பூங்காவ்ல் இடம் பெற்றமைக்கும் சேர்த்து வாழ்த்துக்கள்!

ஜீவா

வருகை தந்து நல்ல சேதி சொல்லிய்ருக்கீங்க, நன்றி.

'பாலித்திட'க்கு என்ன அர்த்தம்க?