"என்னிரத்தம்" கவிதை

பாட்டனைப் பார்க்கவே
பேரனும் பிற
நாட்டிலிருந்தே வந்தான்.
பார்க்கப் பரவசந் தரும்
பிஞ்சு முகம்.
கேட்கப் புளகாங்கிதம்
மழலைத் தமிழ்.

வீட்டில் வேலைசெய்ய
வந்து நிற்பான்
தானும் கூடவே.
தன்பாடும் தானுமாய்
இருந்த எனக்கு
தெரியுமாம் என்றான்
எல்லாந் தனக்கு.

வெட்டவேதும் என்றுபோனா
கத்தி கவனம், தாத்தா!
குனிந்தேதும் எடுக்கப்போனா
நாரி கவனம், தாத்தா!
சாப்பிடவென்று கையைவச்சா
கொட்டிண்டும் கவனம்,தாத்தா!
கைகழுவும் போதுகூட
சட்டை கவனம், தாத்தா!

அப்பனுக்குப் பாடஞ்சொன்னான்
அந்தச் சுவாமியப்பன்
அப்பனின் அப்பனெனக்கே
பாடஞ்சொல்லுஞ் சுப்பனாரிவன்?
என்னிரத்தம் அவனப்பனில்,
அவனிரத்தம் சுட்டிப்பயலிலெனில்,
என்கிறுக்கு இவனுக்கெனில்,
என்னிரத்தந்தானே இவனும்!.

3 Responses to “"என்னிரத்தம்" கவிதை”

அப்பனின் அப்பனெனக்கே
பாடஞ்சொல்லுஞ் சுப்பனாரிவன்

அப்பப்பனின் அவதாரம்தனே அவன்

எல்லோரும் நலம்.அப்பாவின் அதிகாரத்தின் பலன் நமக்கு பிள்ளைகள் பிறக்குபோதுதான் தெரிகிறது.நம்ம பதிவுக்கு வந்து வாழ்த்து சொல்லிவிட்டுப் போங்க.வீட்டில் எல்லோரும் நலமா?

எல்லோர் வீட்டில் நடக்கும் நடைமுறையை அழகாக கவிதையாக சொல்லியிருக்கீங்க. தொடருங்கள்.