நவராத்திரி அனுபவம்

நவராத்திரி விழா
சக்தி வழிபாட்டுகுரிய விரதங்களில் நவராத்திரி விரதம் மிகவும் முக்கியமானது. நவராத்திரி சக்தியை வழிபடத் தகுந்த ஒன்பது ராத்திரியும் (நவம் என்பது ஒன்பது)இரவு நேரத்தில் தான் பூஜை செய்யப்படும். இந்த ஒன்பது நாளும் விரமிருந்து கொண்டாடுர். புரட்டாசி மாதத்தின் வளர் பிறையில் பிரதமை திதியில் ஆரம்பித்து ஒன்பது திதியுடன் பத்தாவது திதியான தசமி திதியடன் நிறைவுபெறுகிறது இந்த நவராத்திரி விழா.
முதல் மூன்று நாட்கள் துர்க்கையின் வழிபாடு.அடுத்த மூன்று நாட்கள் லட்சுமி வழிபாடு.அதற்கடுத்த மூன்று நாட்கள் சரஸ்வதி வழிபாடு. பத்தாம் நாளான விஐய தசமி அன்று புதிய வித்தைகள், கலை,கல்வி கற்பதைத் தொடங்குவார்கள்.

வீட்டில், பள்ளிக்கூடத்தில் பத்து நாட்கள் கொண்டாடப்படும் விழாவாக நவராத்திரியைத் தவிர வேறு விரத விழாவும் இல்லை என்றே சொல்லலாம்.யாழ்ப்பாணத்தில் நாம் இதனைக் கொண்டாடும்போது தமிழ்நாட்டில் நடப்பது போன்று கொலு எதுவும் வைப்பதில்லை.முதல் நாளன்று தலை வாழை இலை ஒன்றின் மேல் மண்ணை ஈரமாக்கி நவதானியங்களைக் கலந்து, அந்த மண்ணின் மேல் கும்பத்தை வைத்துக் கொள்வோம்.அந்தக் கும்பத்திற்கு சந்தனம் குங்குமம் இட்டுக் கொள்வோம்.அந்த வாழை இலையில் வெற்றிலை பாக்கு வாழைப் பழம் பத்து நாளும் புதிதாக வைப்போம். ஒவ்வொரு நாள் இரவும் சக்கரைப் பொங்கல், வெண் பொங்கல்,அவல், சுண்டல், பழங்கள் இவற்றில் ஏதாவது பிரசாதமாக படைத்து, குடுபத்தவர் ஒன்றுகூடி, பசனைகள் பாடி சக்தியை வழிபடுவோம்.

படிக்கின்ற மாணவர்கள் கட்டாயமாக விரதமிருந்து நவராத்திரி வழிபாட்டைச் செய்வேண்டும் என்பது பரவலான எதிர்பார்ப்பாகும்.ஒன்பதாம் நாள் வீட்டுக்கு கடைசி நாள்.பள்ளிக்கூடத்தில் படிக்கிற புத்தகங்கள் எல்லாம் கும்பத்திற்கு முன்னாலே வைப்போம். அதனால் நிறையப் பிரசாதங்கள் செய்து படைப்போம். பின் அவற்றை அண்டை அயலவருக்கும் கொடுத்து உண்பதிலும் ஒரு தனி இன்பமே.இவற்றில் அவல்,சுண்டல்க்கடலை இவற்றுக்குத் தான் பலரும் ஆசைப்படுவர். ஏனென்றால் இவை இரண்டையும் யாழ்ப்பணத்தில் நவராத்திரி நாட்களித்தான் காணலம்.
பத்தாம் நாள் வீட்டில் வழிபட்டபின் அந்த நவதானிய முளைகளைப் பிடுங்கி புத்தகங்களில் வைப்போம். கல்வி நிறைய வருமாம் என்று ஒரு நம்பிக்கை. ஒவ்வொரு வருட நவராத்திரியும் எனக்கு அந்தக் காலத்தில் நாம் வீட்டிலும், பள்ளிக்கூடத்திலும் எப்படியெல்லாம் குதூகலமாக கொண்டாடினோம் என்பதை நினைவு படுத்தும்.அங்கு அப்போதெல்லாம் பலரிடம்ஆன்மீக அனுபவத்தைக் காட்டிலும் ஒரு வித கொண்டாட்டக் களிப்புத் தான் அதிகம் மேலோங்கி இருந்தது என்பது என் கருத்தாகும். இந்த அனுபவம் வீட்டுக்கு வீடு வேறுபடக் கூடும்.

பள்ளிக்கூடத்தில் ஒரு மண்டபத்தில் மேசை ஒன்றின் மேல் கும்பத்தை வைத்து,ஒன்பது நாளும் காலை எல்லா வகுப்பினரும் ஒன்றுகூடி பசனைகள் பாடித் துதிப்போம்.ஒன்பதாம் நாள் பசனைகள் முடிந்ததும் பாட்டு, நடனம் போன்ற கலை நிகழ்ச்சிகள் இடம்பெறும்.கடைசி நாளான விசயதசமி அன்றுதான் பிரசாதங்கள் நிறையச் செய்து படைக்கப்படும்.பன்னிரண்டாம் வகுப்பு மணவர்கள்தான் இதற்கான ஒழுங்குகளை சில ஆசிரியர்களின் உதவியுடன் செய்வார்கள். இந்தப் பத்து நாளும் திரும்மத்திரும்ப சலகலாவல்லி மாலையைப் பாடிப்பாடி அது மனப்பாடமாகவெ வந்துவிடும்.

வீட்டில் இந்த விழா கொண்டாடப்படுமபோது வீடு கோயிலைப் போல களை கட்டிவிடும் என்று கூட சொல்லாம்.

11 Responses to “நவராத்திரி அனுபவம்”

jeevagv said...

பதிவுக்கு நன்றி!

நன்றி ஜீவ.

நான் செவ்வாய், வெள்ளி தவிர நான் பிடிக்கும் நீண்ட விரதம் தற்போதைக்கு நவராத்திரி தான். இம்முறை அவுஸ்திரேலியப் பஞ்சாங்க முறைப்படி வியாழக்கிழமையே இங்கு ஆரம்பித்துவிட்டது. கோயில்களிலும் அப்படியே.

எனவே இம்முறை இங்கு 11 நாள் விழாவாக இருக்கப் போகின்றது. நவராத்திரி குறித்து போனவருசம் நான் எழுதிய நினைவுப்பதிவு இதோ

http://kanapraba.blogspot.com/2006/09/blog-post_29.html

பிரபா
சிறுவயது முதல் பொதுவாக அனைவரும் பிடிக்கும் விரதம் இதுவாகத் தானிருக்கும் என நான் நினைக்கிறேன்.
//நான் பிடிக்கும் நீண்ட விரதம் தற்போதைக்கு நவராத்திரி தான். //
இத்துடன் கந்தசஷ்டி, பிள்ளையார் கதை, பின் திருவெம்பாவை வரை எனது விரதப் பயணம் இருக்கும்

//எனவே இம்முறை இங்கு 11 நாள் விழாவாக இருக்கப் போகின்றது.//
இதி 4 நாள் துர்க்கைக்கு என்கிறார்கள்.

உங்கள் பதிவையும் படித்து பதிலளிக்கிறேன்
நன்றி:-)

நவராத்திரி என்றால் அவல் தான் நினைவுக்கு வருகுது. :-))

நவராத்திரி எப்ப துவங்குது?

/* பள்ளிக்கூடத்தில் ஒரு மண்டபத்தில் மேசை ஒன்றின் மேல் கும்பத்தை வைத்து,ஒன்பது நாளும் காலை எல்லா வகுப்பினரும் ஒன்றுகூடி பசனைகள் பாடித் துதிப்போம். */

எங்கள் பாடசாலையில் உள்ளுக்கு பாடசாலைக்குச் சொந்தமான கோயில் இருக்கு. நான் நினைக்கிறேன், நவராத்திரிக் கடைசி நாள் அம்மன் வலம் வருவார்[சரியாக நினைவு இல்லை] ஒவ்வொரு வகுப்புக்கு முன்னும் சோடினைகள், அது இது என ஒரே அமர்க்களமாக இருக்கும்.

இதில் என்ன பகிடி என்றால், வகுப்பில் அதிகமானவர்கள் நோண்பிருப்பவர்கள், அதிலும் குறிப்பாகப் பெண்பிள்ளைகள். அவைக்குப் போகும் அவல், மற்றும் படையல்கள் எல்லாம் எனக்கும் இன்னும் சில நண்பர்களுக்கும் தான் கிடைக்கும், நாங்கள் தான் நோண்பு இருக்காதாக்கள் :-))

வெற்றி

நவராத்திரி 12ந் திகதி தொடங்கீட்டுது!
இந்த முறை 11 நாள். ஒரு நாள் துர்க்கைக்கு கூடவாம்

//வகுப்பில் அதிகமானவர்கள் நோண்பிருப்பவர்கள், அதிலும் குறிப்பாகப் பெண்பிள்ளைகள்.//
நான் 6-8 வகுப்பு பண்டத்தரிப்பு மளிர் கல்லூரியில் படிச்சனான். அப்போ வகுப்பில் எல்லாருமே விரதம்.
ஆனா வீட்டில நான் மட்டுந்தான் விரதம். அண்ணைப் பசங்கள் விரதத்திற்கு சரியான கள்ளன்கள். அது பொடியளின்ர குண்மாக்கம்
நன்றி:-)

செல்லி,

இந்தத் தடவை 11 நாள் அன்னையை உபசரிக்க முடியும்னு நினைத்தாலே சந்தோஷமாக இருக்கிறது.
விவரங்களுக்கு நன்றி. நவராத்திரி வாழ்த்துக்களும் கூட.

நவராத்திரி விழாவை வேறு மதிரியாக கொண்டாடுவார்களா இலங்கையில். அதுவும் நன்றாகத்தான் இருக்கிறது. ஆகமொத்தம் எல்லா இட்ங்களிலும் மக்கள் கூடும் விழாதான்.

வல்லி. தி.ரா.சா.சார்
உங்க வருகைக்கும் கருத்திற்கும் மிக நன்றி.

நவராத்திரி என்றாலே பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் கொண்டாட்டம்தான். திரு விழா மாதிரி கொண்டாடலாம். ஆடல் பாடல் சுண்டல் தாம்பூலம் அனைத்து வீடுகளுக்கும் அழைப்பின் பேரில் செல்லலாம் - அனைவரையும் காணலாம் - பேசலாம் - களிக்கலாம்

//நவராத்திரி என்றாலே பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் கொண்டாட்டம்தான்.//
உண்மைதான் சீனா.சக்திக்கு உரிய விழா என்பதுதான் காரணமாயிருக்கும் என நான் நினைக்கிறேன்.

// அனைத்து வீடுகளுக்கும் அழைப்பின் பேரில் செல்லலாம் - அனைவரையும் காணலாம் - பேசலாம் - களிக்கலாம்//
பிறிஸ்பேனில் வீடுவீடாக பத்து நாளும் பசனைகளுக்கு அழைப்பு வரும். ஒரே ஓட்டமும் கொண்டாட்டமும் தான். இன்றோடு அதுவும் முடிகிறது.

இனி இதற்காக ஒரு வருடம் காத்திருக்க வேணும்.
நன்றி, சீனா:-)