புராதன காலத்திற் கூட மனிதன் வேட்டையாடி அதாவது அந்த வேட்டைத் தொழிலைச் செய்து உணவைப் பெற்றுக் கொண்டான். மனிதனின் அறிவு விருத்தியடைந்து அவன் கல்வியைக் கற்கத் தொடங்கினான். தனிய அறிவுக்காக மட்டுமல்ல, தொழிலுக்காகவும்தான் கல்வியைக் கற்கிறான். அவனவன் கல்வித்தகமைகளுக்கேற்ப தொழிலைச் செய்கிறான்.பெரிய அரசன் ஆனாலும் சரி, தொழிலதிபரானாலும் சரி, அன்றாடம் உழைக்கும் கூலிக்காரன் ஆனாலும் சரி அவர்கள் உழைப்பின் அடிப்படை ஒரு வேளை உணவுக்குத்தான். இதனைத்தான் கீழ்வரும் பாடலில் குறிப்பிடுகிறது.
சேவித்தும் சென்று இரந்தும் தெண் நீர்க்கடல் கடந்தும்
பாவித்தும் பாராண்டும் பாட்டு இசைத்தும் போவிப்பம்
பாழின் உடம்பை வயிற்றின் கொடுமையால்
நாழி அரிசிக்கே நாம். (19, நல்வழி)
வயிற்றுப் பசியின் கொடுமையினாலே மற்றவரை வணங்கியும்; சென்று இரங்கிக் கேட்டும்;கடல் கடந்து வெளிநாட்டுக்குச் சென்றும்;(திரை கடலோடியும் திரவியந் தேடு) ஒன்றுக்கும் தகுதியற்ற அற்பர்களை (தொழில் தேவைக்காக) பெரியவர்களாக (நீ தானையா பெரிய மனுசன் என முகஸ்துதி பேசி) பாவித்தும்;உலகை ஆண்டும் (முன்பு அரசன் ஆண்டான் தற்போது அதிகாரங்களை வைத்து பல பேர் பல இடங்களில் ஆளுகிறார்கள்) செல்வர்களைப் புகழ்ந்து பாட்டுப் பாடியும் நாம் இந்த உடம்பை ஒரு படி அரிசிக்காகவே உழைத்துக் கொண்டிருக்கிறோம்.
இப்படி அடிப்படையில் உணவுக்காக உழைக்கும்போது, அந்த உணவே அவனது உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கிறது என்றால் அது யாருடைய தவறு?.இதற்கு மனிதனுடைய உடற் சோம்பல், மனச் சோம்பல்தான் காரணம். இன்றைய மனிதன் அந்த உணவை வயதிற்கேற்ப சரியான அளவில், உரிய நேரத்தில், ஊட்டச் சத்து உள்ளதாக உண்ணத் தவறியதால் தற்போது உலகெங்கும் உடல் "எடை அதிகரிப்பு"(over weight) பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.
உடலில் அதிகரித்துள்ள கொழுப்பு (obesity)வயதானவர், இளையஞர், சிறுவர் என்ற வயது வேறுபாடின்றி பிரச்சனையாக இருந்து வருகிறது.உடலில் கொழுப்பின் அளவு கூடும்போது உடலின் எடை (நிறை) அதிகரிப்பு ஏற்படுகிறது. இந்த எடை அதிகரிப்பு பல நோய்களுக்கு இடமளிக்கிறது.இருதய சம்பந்தமான நோய்கள், கொலஸ்திரோல் பிரச்சனை, நீரிழிவு, புற்றுநோய் என்பவற்றை உதாரணமாகக் குறிப்பிடலாம்.அத்துடன், ஓடி, ஆடி வேலை செய்யும் ஆற்றலைக் குறைக்கிறது; இதனால் தொழில் வாய்ப்பை இழக்க நேரிடுகிறது; சமூகத்தில் மதிப்பை குறைக்கிறது; மன அழுத்ததைக் கொடுக்கிறது.
இந்த எடை அதிகரிப்புப் பிரச்சனைக்கு சூழல், பழக்க வழக்கங்கள், பரம்பரை, பிறப்பு சம்பந்தமான காரணங்கள் தொடர்பு பட்டிருந்தாலுங்கூட, உணவு முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை யாரும் மறுப்பதற்கில்லை.
_____________________________________________________________________________________
14 Responses to “மனித உழைப்பு ஒரு வேளை சோற்றுக்காகவா?.......அதுவும் பிரச்சனை தருகிறதா?”
உத்தியோகம் இரு பாலருக்கும் லட்சணமாகிவிட்ட இந்தக் காலத்தில் நாம் உழைப்பது 90% மானங்காக்கத்தான்.அதாவது மத்தவங்க மாதிரி நாமும் முன்னேறணும், நல்லாக் காசு உழைக்கணுங்கிறதா இப்போதய பிரச்சனையே தவிர உண்வுக்காக உழைக்கிறேன் என யாரும் அலட்டிக் கொள்வதில்ல அல்லது அப்படிப் பெரிசா நினைப்பதில்லன்னு நான் நினைக்கிறேன்.
over weight பிரச்சனைதான், எங்க?
பணம் படைத்த நாடுகளில தான். வளரும் நாடுகளில பட்டினி தொடர்ந்து கொண்டே இருக்கு. அங்கை தான் உழைப்புக்கும் சாப்பாட்டிற்கும் ஒட்டின தொடர்பு இருக்குன்னு நான் நினைக்கிறேன்.
நன்றி
விபரமான பதிலுக்கு நன்றி சின்னா.
'கோட்டி வித்தலு கூட்டுக்குறக்கு' தெலுங்குப் பழமொழி. எங்க பாட்டி அடிக்கடி சொல்றது.
எத்தனை கோடி வித்தைகள் காமிச்சுச் சம்பாரிக்கறதெல்லாம் ஒரு வாய்
சாப்பாட்டுக்குத்தானாம்னு இதுக்கு அர்த்தம்.
வாங்க துளசி
//கோட்டி வித்தலு கூட்டுக்குறக்கு' தெலுங்குப் பழமொழி. எங்க பாட்டி அடிக்கடி சொல்றது.எத்தனை கோடி வித்தைகள் காமிச்சுச் சம்பாரிக்கறதெல்லாம் ஒரு வாய்
சாப்பாட்டுக்குத்தானாம்னு இதுக்கு அர்த்தம்.//
உண்மைதான். நல்வழியில் ஒளவையும் அப்படித்தான் சொல்கிறார்.
ஆனால், நடைமுறை வாழ்க்கையில் தினசரி அதிகரித்து வரும் நம் தேவைகள் மத்தியில் நாம் இதை உணர்வதில்லை,அல்லவா!
வருகைக்கு நன்றி, துளசி.
செல்லி, சாப்பாட்டுக்காக ஆரம்பித்தது இப்போ இரண்டு மூணு கார் வரை வந்து நிற்கிறது.
மனிதர்கள் எதற்காக உழைக்க ஆரம்பித்தார்களோ ,
அதை மறந்துவிட்டு உலக ஓட்டத்தில் கலந்துவிட்டார்கள்.
இவர்கள் நடுத்தரத்திலிருந்து உயர்மட்டம் வரை. வறுமைக் கோடூ ,அதற்குக் கீழே இருக்கும் மக்கள் உழைத்துப்,பின் குடித்து சந்தோஷத்தைத் தொலைக்கிறார்கள். உழைப்பவர்கள் எப்போதும் உழைத்துக் கொண்டேதான் இருக்கிறார்கள்.
செவிக்குணவு இல்லையெனில் ஆங்கே சிறிது வயிற்றுக்கு ஈயப்படும் என்ற கொள்கையைத் தான் கடைப்பிடிக்க வேணும் போல
வாங்க வல்லிசிம்ஹன்
//சாப்பாட்டுக்காக ஆரம்பித்தது இப்போ இரண்டு மூணு கார் வரை வந்து நிற்கிறது.//
கார் மட்டுமா 2 அல்லது 3 வீடுந்தானே! இருக்கப் பெரீசா ஒண்ணு, investment க்கு ஒண்ணு /அல்லது இரண்டு.
//மனிதர்கள் எதற்காக உழைக்க ஆரம்பித்தார்களோ ,அதை மறந்துவிட்டு உலக ஓட்டத்தில் கலந்துவிட்டார்கள்.//
மறந்துவிட்டார்களா? இல்லை நினைக்க நேரமில்லைப் போலும்.
காலத்தின் கட்டாயம்.
//இவர்கள் நடுத்தரத்திலிருந்து உயர்மட்டம் வரை.//
இவர்கள் மாடாய் உழைத்து சிலர் மாடாய்(கண்ட கொழுப்பு உணவையும் உண்டு,உடற் பயிற்சி இன்றி) கொழுத்துவிட்டார்கள்.
//வறுமைக் கோடூ ,அதற்குக் கீழே இருக்கும் மக்கள் உழைத்துப்,பின் குடித்து சந்தோஷத்தைத் தொலைக்கிறார்கள்.//
போதிய படிப்பறிவில்லாதவர் இப்பிடியாகிவிடுகிறார்கள். //உழைப்பவர்கள் எப்போதும் உழைத்துக் கொண்டேதான் இருக்கிறார்கள்.//
உடல்நலத்தையும் வருமானத்தையும்
நன்கு பராமரிப்பவர்கள் இந்த வகையினர்தான்.
வருகைக்கும் உங்க கருத்துக்கும் நன்றி, வல்லி.அது சரி ஒருமுறை ஒஸ்ரேலியாவையும் வந்து பார்த்துவிட்டுப் போங்களேன்.
வணக்கம் பிரபா
//செவிக்குணவு இல்லையெனில் //
நிறையக் கேட்க(listen) வேண்டும் என முதலில் குறிப்பிடுவதால் என்ன விளங்குகிறது எனில் ஞானப் பசிக்குத் தீனி முதலில் போட வேண்டும் என்பதுதான். அந்தக் காலத்தில் இன்று போல printed and electronic media க்கள் இருக்கவில்லை. குரு,பெரிய அறிஞர்கள் சொல்வதைக் கேட்டு அறிவை வளர்க்க வேண்டி இருந்தது.இது கேள்வி ஞானம் என்பதாகும்.
அதன் பிறகேதான் //சிறிது வயிற்றுக்கு ஈயப்படும் //
இங்கேதான் முக்கியமான ஒன்றைக் கவனிக்க வேண்டும். அதாவது, "சிறிது" வயிற்றுக்கு கொடுக்க வேண்டும். ஆனா பெரும்பாலானவர் வயிறு புடைக்கவல்லவோ சாப்பிடுகிறார்கள்;நோயையும் வளர்க்கிறார்கள்.
உங்க வருகைக்கு நன்றி, பிரபா.
ஒரு ஜான் வயிரே இல்லாட்டா இந்த உலகத்தில் ஏது கலாட்டா
ஒரு நாளைக்கு ஏல் என்றால் ஏலாய்
இருநாளைக்கு கொள் என்றால் கொள்ளாய்.
இடும்பைகூர் என் வயிரே
உன்னோடு வாழ்தல் அரிது.
உங்கள் பதிவை பார்க்காமலே ஔவையார் கூறிவிட்டாரே.
உணவுக்குகாக சம்பாதிக்கிறேன் என்றால் மாதம் 10 லட்ச ரூபாய் சம்பாதிப்பவர்கள் ஏன் அப்படிச் செய்ய வேண்டும். ஆகவே காரணம் அது இல்லை
வாங்க தி.ரா.ச. சார்
நலமா?
//ஒரு ஜான் வயிரே இல்லாட்டா இந்த உலகத்தில் ஏது கலாட்டா//
இந்த ஒரு சாண் வயிற்றுக்காக சின்ன வேலையோ என்ன வேலையோ செய்ய வேண்டியிருக்கே, சார்.
//உணவுக்குகாக சம்பாதிக்கிறேன் என்றால் மாதம் 10 லட்ச ரூபாய் சம்பாதிப்பவர்கள் ஏன் அப்படிச் செய்ய வேண்டும். ஆகவே காரணம் அது இல்லை// தினசரி அதிகரிக்கும் பொருளாதாரத் தேவைகள்தான் காரணம்.இது காலத்தின் கட்டாயமாய்ப் போச்சு சார்! என்ன பண்றது அப்படி உழைச்சே ஆகவேண்டியிருக்கு!
உங்க வருகைக்கும் ஆதரவுக்கும் நன்றி, ஐயா.
செல்லி!
நான் "உண்பதற்காக உழைக்கிறேனா; உழைப்பதற்காக உண்கிறேனா" இது வரை புரியவில்லை.
இனியும் புரியுமோ தெரியவில்லை.
வாங்க யோகன்
என்ன இப்பிடிச் சொல்லிட்டீங்க!
//நான் "உண்பதற்காக உழைக்கிறேனா; உழைப்பதற்காக உண்கிறேனா" //
முதல்ல உணவுக்கு உழைச்சாப் போதும் எண்டுதான் ஆரம்பிச்சோம். பொருளாதாரத் தேவைகள் எல்லாம் நம்மைத் துரத்தத் துரத்த, ஓடி ஓடி உழைக்கும் உடம்பு, தெம்பாக இருக்கோணுமே என்கிறதுக்காகச் சாப்பிடுறோம். அவ்வளவுதான்!
இதிலே சத்தாகச் சாப்பிறோமா? என்பதுதான் பிரச்சனையே!
வருகைக்கு நன்றி, யோகன்.
//செவிக்குணவு இல்லையெனில் ஆங்கே சிறிது வயிற்றுக்கு ஈயப்படும் என்ற கொள்கையைத் தான் கடைப்பிடிக்க வேணும் போல//
நானும் இதை ஆமோதிக்கிறேன்.
கணேசன்
நல்ல இசை, நல்லோர் வார்த்தை, நல்லன எல்லாம் செவிக்கு உணவாகிறது.இவைதான் முக்கியமானவை. அதற்குப் பிறகு சி்றிதளவு வயிற்றுக்கு உணவு.
RR
Post a Comment